Assam Newborn Baby : அசாமில் 5.2 கிலோ எடையுடன் பிறந்த ஆண் குழந்தை
அசாம் மாநிலத்தில் 5.2 கிலோ எடையுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. மாநிலத்திலே அதிக எடையுடன் பிறந்த குழந்தை என்ற சாதனையை படைத்துள்ளது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பதல்தாஸ். இவரது மனைவி ஜெயாதாஸ். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில், ஜெயாதாஸ் மீண்டும் கருவுற்றிருந்தார். அந்த மாநிலத்தின் மருத்துவமனையில் தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்டு வந்தார் ஜெயதாஸ். அவருக்கு கடந்த மே மாதம் 29-ந் தேதி குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், அதனால் மருத்துவமனையில் அனுமதிக்குமாறும் முன்கூட்டியே அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாகவும், ஊரடங்கு காரணமாகவும் மருத்துவமனையில் குறிப்பிட்ட தேதியில் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில், கடந்த சில தினங்களுககு முன்பு ஜெயதாஸ் கசார் மாவட்டத்தில் உள்ள சில்சார் நகரத்தில் உள்ள மருத்துவமனையில் பிரவசத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த செவ்வாய்கிழமை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அப்போது, அழகான ஆண்குழந்தை பிறந்தது.
அந்த குழந்தையை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பொதுவாக, பிறக்கும் குழந்தைகள் 2.5 கிலோ இருப்பது வழக்கம். ஆனால், இந்த குழந்தை 5.2 கிலோ இருந்தது. கடந்த காலங்களில் அசாம் மாநிலத்தில் 4 கிலோ எடையுடன் குழந்தை பிறந்ததே அதிகபட்ச எடையுடன் பிறந்த குழந்தையாக இருந்தது. இந்த நிலையில், தற்போது 5.2 கிலோ எடையுடன் குழந்தை பிறந்துள்ளதால், அசாம் மாநிலத்திலே பிறக்கும்போது அதிக எடையுடன் பிறந்த குழந்தை என்ற சாதனையை இந்த குழந்தை படைத்துள்ளது.
பதல்தாஸ் மற்றும் ஜெயதாஸ் தம்பதியினருக்கு இந்த குழந்தை இரண்டாவது குழந்தை ஆகும். இவர்களுக்கு முதலில் பிறந்த குழந்தை 3.8 கிலோ கிராம் எடையுடன் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக, 5.2 கிலோ எடையுடன் பிறந்த குழந்தையின் தந்தை பதல்தாஸ் கூறும்போது, எங்களது முதல் குழந்தையும் 4 கிலோ எடையுடன் பிறந்தது. அது ஒரு கடினமான சூழல். கொரோனா தொற்றிற்கு அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளித்து வருவதால், எனது மனைவியை அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அழைத்து வருவதில் சிறிய தயக்கம் இருந்தது. ஆனாலும், இறுதியாக மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதித்தோம். எனது மனைவியையும், குழந்தையையும் காப்பாற்றிய மருத்துவர்களுக்க நன்றி என்று கூறினார்.
இதுதொடர்பாக, மருத்துவர்கள் கூறும்போது பொதுவாக கருவுற்ற பெண்களுக்கு 38வது வாரம் முதல் 42வது வாரத்திற்குள் குழந்தை பிறந்துவிடும். ஆனால், ஜெயதாசை மருத்துவமனையில் அனுமதிக்க தாமதப்படுத்திவிட்டனர். இருப்பினும் நல்ல முறையில் தாயையும், குழந்தையையும் காப்பாற்றி விட்டோம் என்றார்.
மேலும் படிக்க : Telangana Lockdown : லாக்டவுனை திரும்பப்பெற்றது தெலங்கானா! - முதலமைச்சர் சந்திரசேகரராவ் அறிவிப்பு