23 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசுப் பணி.. நியமன ஆணைகளை வழங்கிய அசாம் முதல்வர்!
அசாம் மாநில அரசின் பல்வேறு துறைகளில் பணியிடங்களை நிரப்பும் விதமாக சுமார் 23 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணை வழங்கியுள்ளா அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா.
அசாம் மாநில அரசின் பல்வேறு துறைகளில் பணியிடங்களை நிரப்பும் விதமாக சுமார் 23 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணை வழங்கியுள்ளா அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா. தனது வாக்குறுதியான 1 லட்சம் அரசுப் பணிகள் என்ற இலக்கை நோக்கித் தனது அரசு நிர்வாகம் இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அசாம் மாநில அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் இதனைக் கூறியுள்ள அவர், 11 துறைகளில் 22,958 புதிய பணியாளர்களை நியமித்துள்ளதோடு, தனது அரசு கடந்த ஒரு ஆண்டில் சுமார் 28 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
கல்வித் துறையில் 11 ஆயிரம் பேர், உள்துறையில் சுமார் 9 ஆயிரம் பேர், சுகாதாரத் துறையில் சுமார் 2 ஆயிரம் பேர் முதலானோருக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ள அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, `கொரோனா விவகாரம் சற்று தளர்ந்தவுடன், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தின் போது கல்வித்துறையில் சுமார் 4700 இளைஞருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளோம்’ என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அசாம் முதல்வர் வரும் ஜூலை 15க்குள் சுமார் 7 ஆயிரம் இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளதாகவும், வரும் ஜூலை மாத இறுதியின் போது சுமார் 26 ஆயிரம் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் பணி நியமனங்கள் வெளிப்படையாகவும், எந்த லஞ்சமும் கொடுக்கப்படாமல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
`பணி நியமனங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். எனது அமைச்சரவையில் உள்ள நண்பர்கள், அதிகாரிகள், அரசுப் பணியாளர்கள் ஆகியோரிடம் வெளிப்படையான பணி நியமனங்கள் நடைபெற வேண்டும் என ஆணையிட்டுள்ளேன்’ எனக் கூறியுள்ள அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா புதிதாக பணியில் இணைந்திருப்போரிடம் கூடுதல் வருமானத்திற்காக லஞ்சம் வாங்க கூடாது என அறிவுறுத்தியதுடன் தனது அரசு ஊழலுக்கு எதிரானது எனவும் கூறியுள்ளார்.
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, `அசாம் மாநிலத்தை அதிகளவில் செயலாற்றும் மாநிலமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அதற்காக மக்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்ற உங்களிடன் ஆதரவைக் கோருகிறோம். மொத்த நிர்வாக அமைப்பிலும், புதிய பணியாளர்கள் தங்கள் திறமையைக் காட்டுவார்கள் என நம்பிக்கையுடன் இருக்கிறேன்’ என்றும் கூறியுள்ளார்.
மேலும், புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் இவ்வளவு தூரம் பயணித்ததற்குக் காரணமாக இருந்த ஒவ்வொருவரின் பெற்றோரின் தியாகத்தை நினைத்துப் பார்ப்பதோடு, அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.