"சவாலை ஏத்துக்கிறோம்" களத்தில் இறங்கிய கெஜ்ரிவால், அதிஷி.. பாஜகவுக்கு தலைவலிதான் போலயே!
வரவிருக்கும் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலும், அதிஷியும் தொகுதி மாறுவார்கள் என பாஜக கூறியிருந்தது. இப்படிப்பட்ட சூழலில், தற்போது எம்எல்ஏவாக உள்ள அதே தொகுதியில் இருவரும் களமிறங்கியுள்ளனர்.
டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், புது டெல்லி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. தற்போதைய முதலமைச்சர் அதிஷியும், தற்போது எம்எல்ஏவாக உள்ள கல்காஜி தொகுதியில் களம் காண உள்ளார்.
அடுத்தாண்டு பிப்ரவரி மாதம், டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மி கட்சி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜக விடுத்த சவால்:
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில், நான்காவது கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, புது டெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, முதலமைச்சர் அதிஷியும், தற்போது எம்எல்ஏவாக உள்ள கல்காஜி தொகுதியில் களம் காண உள்ளார்.
கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் அமைச்சர் சௌரப் பரத்வாஜ் போட்டியிடுவார் என்றும் பாபர்பூர் தொகுதியில் அமைச்சர் கோபால் ராய் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துவிட்டது.
அதிரடி காட்டிய கெஜ்ரிவால்:
இதுகுறித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "பாஜக கண்ணுக்கு தெரியவில்லை. அவர்களுக்கு முதலமைச்சர் முகமோ, அணியோ, திட்டமோ, டெல்லியைப் பற்றிய தொலைநோக்கு பார்வையோ இல்லை. அவர்களிடம் ஒரே ஒரு முழக்கம் உள்ளது. 'கெஜ்ரிவாலை அகற்ற வேண்டும்' என்பதுதான் அது.
ஐந்தாண்டுகளாக என்ன செய்தீர்கள் என்று கேட்டால், 'கெஜ்ரிவாலை நாங்கள் துன்புறுத்தினோம்' என்பார்கள். டெல்லி மற்றும் அதன் மக்களின் வளர்ச்சிக்கான ஒரு தொலைநோக்கு பார்வையை ஆம் ஆத்மியிடம் இருக்கிறது. இதை செயல்படுத்த ஒரு திட்டமும் படித்த தலைவர்கள் குழுவும் உள்ளது.
"10 ஆண்டுகளில் நாங்கள் செய்த வேலைகளின் பட்டியல் எங்களிடம் உள்ளது. டெல்லிவாசிகள் வேலை செய்பவர்களுக்கு வாக்களிப்பார்கள். துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு அல்ல" என்றார்.
முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தனது தற்போதைய தொகுதியான பட்பர்கஞ்சிலிருந்து ஜங்புராவுக்கு மாறியபோது, பல ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தோல்வி பயத்தால் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கூறியிருந்தார்.
அதேபோல, அரவிந்த் கெஜ்ரிவாலும், அதிஷியும் தொகுதி மாறுவார்கள் என அவர் கூறியிருந்தார். இப்படிப்பட்ட சூழலில், தற்போது எம்எல்ஏவாக உள்ள அதே தொகுதியில் இருவரும் களமிறங்கியுள்ளனர்.