ராணுவ வாகனத்தை தாக்கிய பயங்கரவாதிகள் - காஷ்மீரில் பெரும் பரபரப்பு
காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு, பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. சிறப்பு அந்தஸ்தின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பு வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, பாதுகாப்பு, தகவல் தொடர்பு, வெளி விவகாரங்களை தவிர மற்ற எல்லா துறைகளிலும் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஜம்மு காஷ்மீர் அரசுக்கு வழங்கப்பட்டது.
காஷ்மீரில் பயங்கரவாதம்:
சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாக லடாக் இருந்து வருகிறது. அது மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சட்டப்பேரவை இருந்துபோதிலும், அதற்கு இன்னும் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், பயங்கரவாத தாக்குதல்கள் நின்றபாடில்லை என்றும் முன்பைவிட தற்போது அதிக எண்ணிக்கையில் நிகழ்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
ராணுவ வாகனத்தை மறைந்திருந்து தாக்கிய பயங்கரவாதிகள்:
இந்த நிலையில், பூஞ்ச் மாவட்டத்தில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரே மாதத்தில், பூஞ்ச் மாவட்டத்தில் இரண்டாவது முறையாக ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவ இடத்துக்கு பாதுகாப்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். தற்போது, அங்கு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் பகுதியில் தேரா கி கலி என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காயம் அடைவர்களை மீட்க ஆம்புலன்ஸ் வாகனமும் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "உளவுத்துறை அளித்த தகவலின்படி, நேற்று இரவு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் காவல்துறையுடன் இணைந்து ராணுவம் ஈடுபட்டது. சம்பவ இடத்தில் உள்ள ராணுவ அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். என்கவுண்டர் நடந்து வருகிறது" என்றார்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்:
சமீபத்தில், குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே மச்சில் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததை அடுத்து, மாநில காவல்துறையும், ராணுவமும் இணைந்து அங்கு சென்று தாக்குதல் நடத்தியது. இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் முதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த ஆண்டு இதுவரை கொல்லப்பட்டுள்ள 46 பயங்கரவாதிகளில் 37 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் 9 பேர் மட்டுமே ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. உள்ளூர் பயங்கரவாதிகளைவிட வெளிநாட்டு பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், ஜம்மு காஷ்மீரில் தற்போது சுமார் 130 பயங்கரவாதிகள் உள்ளதாகவும், இவர்களில் பாதி பேர் வெளிநாட்டவர்ள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.