நண்பர்களுடன் புனித நீராடிய ராணுவ வீரர் உயிரிழப்பு: 4 நாட்களுக்குப் பின் கரை ஒதுங்கிய உடல்!
பிஹாரில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரரின் உடல் 4 நாட்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரரின் உடல் 4 நாட்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டம் மணிஹரி கிராமத்தைச் சேர்ந்தவர் விசால் குமார். 22 வயதான இவர் ராணுவத்தில் வேலை செய்கிறார். அண்மையில் இவர் தனது சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்திருந்தார்.
சத் பூஜையை ஒட்டி கங்கை ஆற்றில் நண்பர்களுடன் புனித நீராடினார். அப்போது அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள் தேடியுள்ளனர். ஆனால் அவரை மீட்க முடியவில்லை. இந்நிலையில் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 100 மணி நேரம் ஆன நிலையில், அம்தாபாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அவரது உடல் ஆற்றில் மிதந்து கொண்டிருந்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 25 கி.மீ தூரத்தில் அந்த உடல் கிடந்தது. அந்த உடல் விஷால் குமாருடையது என்பது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்ட இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. விடுமுறைக்கு வந்த வீரர் உயிரிழந்த சம்பவம் அவர் கிராமத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.