North Indian Labour: வடமாநில தொழிலாளர்களுக்கு என்ன பிரச்சனை? ஆய்வுசெய்ய தமிழ்நாடு வருகிறது பீகார் குழு..!
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில வாரங்களாகவே தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவின
தமிழ்நாடு உழவுக்கும் நெசவுக்கும் பெயர் பெற்றது என அனைவருக்கும் தெரிந்ததுதான். அதேபோல், தொழில் துறையிலும் தமிழ்நாடு நாட்டில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிருவனங்கள் தொடங்கி ஹோட்டல்கள் வரை அடிமட்ட கூலி வேலைக்கு வடமாநில தொழிலாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள்.
குறிப்பாக திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம். திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிகளில் தமிழர்களை விட வடமாநில தொழிலாளர்கள் தான் அதிகம் பணிபுரிகின்றனர். இந்நிலையில் திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இதனை திருப்பூர் மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்தது. மேலும், வடமாநில தொழிலாளர்களின் புகார்களைக் களைய தனிப் பிரிவும் ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடமாநில பத்திரிகையாளர் ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சம்பந்தமில்லாத, பொய்யான வீடியோக்களை பதிவிட்டு வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக குறிப்பிட்டு இருந்தார். இதனை குறிப்பிட்டு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, அந்த வீடியோ தவறானது என்றும், வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக பணியாற்றி வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து, பத்திரிகையாளர் தான் பதிவிட்டு இருந்த வீடியோவை நீக்கிவிட்டார்.
மேலும், இன்று பீகார் மாநில அனைத்துக் கட்சிக் குழு தமிழ்நாடு வரவுள்ளது. அக்குழு தமிழ்நாடு அரசுடன் பீகார் மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்தியும், தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வும் செய்யவுள்ளது. இந்நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டம் ரயில் நிலையம் அருகே பீகார் மாநில தொழிலாளர் ஒருவர் காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதை அறிந்த வடமாநில தொழிலாளார்கள் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி ரயில் நிலையத்தில் ஒன்று கூடினர். பின்னர் காவல் துறை தரப்பில் ரயிலில் அடிபட்டு இறந்தார் என தெளிவுபடுத்தப்பட்ட பின்னர், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.