பாகிஸ்தான், வங்கதேச எல்லைகளில் அதிரடி திட்டம்.. போட்டு உடைத்த மத்திய அமைச்சர் அமித்ஷா
எல்லைகள் பாதுகாப்பாக இல்லாவிட்டால் ஒரு நாடு வளர்ச்சியடையாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய எல்லை பாதுகாப்பு படையாக இந்தியாவின் பிஎஸ்எஃப் உள்ளது. இந்திய எல்லை பாதுகாப்பு படையில் கிட்டத்தட்ட 2.5 லட்சம் வீரர்கள் சேவையாற்றி வருகின்றனர். கடந்த 1965ஆம் ஆண்டு, டிசம்பர் 1ஆம் தேதி, இந்திய - பாகிஸ்தான் போரின்போது, எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் எல்லை பாதுகாப்பு படை தொடங்கப்பட்டது.
பாகிஸ்தான், வங்கதேச எல்லைகளில் அதிரடி திட்டம்:
எல்லை பாதுகாப்பு படையின் சேவையை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ஆம் தேதி, அதன் தொடக்க நாள் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டின் தொடக்க விழா ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் நடைபெற்றது. அப்போது, எல்லை பாதுதாப்பு படையின் ராணுவ அணிவகுப்பை ஏற்று கொண்டு பேசிய அமித் ஷா, "அடுத்த இரண்டு ஆண்டுகளில், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் உடனான இந்தியாவின் இரண்டு முக்கிய எல்லைகள் முற்றிலும் பாதுகாக்கப்படும்.
நரேந்திர மோடி அரசாங்கம் மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியா-பாகிஸ்தான் மற்றும் இந்தியா-வங்கதேசம் எல்லைகளில் சுமார் 560 கிலோமீட்டர் தூரத்திற்கு வேலி அமைத்து இடையில் இருக்கும் பகுதிகளை மூடியுள்ளது.
இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள இந்த இரு எல்லைகளில் உள்ள அனைத்து இடைவெளிகளும் முறையே அடைக்கப்பட்டு, சுமார் 60 கிமீ தூரத்தில் மட்டுமே பணிகள் தொடர்கின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த இரண்டு எல்லைகளையும் முழுமையாகப் பாதுகாப்போம்.
எல்லைகள் பாதுகாப்பாக இல்லாவிட்டால் ஒரு நாடு வளர்ச்சியடையாது. செழிக்க முடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் சந்திரயான் மிஷன், ஜி 20 உச்சி மாநாடு மூலம் நாட்டை நிலவுக்கு அழைத்துச் சென்று பொருளாதாரத்தை 11ஆவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு கொண்டு வந்துள்ளது.
"எல்லைப் பாதுகாப்புக்கு முன்னுரிமை"
எல்லை பாதுகாப்பு படை போன்றவற்றை எல்லைகளில் நிறுத்தியுள்ளதால்தான் இது சாத்தியமானது. இந்த பயணத்தின் முக்கிய தூணாக எல்லை பாதுகாப்பு படை உள்ளது. எல்லை வேலி மட்டும் நாட்டைப் பாதுகாக்காது. இந்தப் பணியைச் செய்வதற்கு மட்டுமே உதவுகிறது என்று நான் நம்புகிறேன். இந்த பணியை துணிச்சலான எல்லை பாதுகாப்பு படை வீரர் தான் செய்கிறார்.
முன்னாள் பிரதமர் ஏபி வாஜ்பாய் அரசில் இருந்து மோடி அரசு வரை எப்பொழுதெல்லாம் பாஜக அரசு ஆட்சி அமைக்கிறதோ, அப்போதெல்லாம் எல்லைப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது" என்றார்.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான சர்வதேச எல்லைப்பகுதி 2,290 கிமீ தூரத்துக்கு நீள்கிறது. இந்தியா - வங்கதேச எல்லைப்பகுதி 4,096 கிமீ தூரத்துக்கு நீள்கிறது. நீண்ட நதி, மலை மற்றும் சதுப்பு நிலப்பகுதிகளால் இந்த எல்லைப்பகுதிகள் நிறைந்துள்ளன. அங்கு வேலிகள் அமைப்பது மிகவும் கடினம். எனவே, எல்லை பாதுகாப்பு படை உள்ளிட்டவை ஊடுருவலை தடுக்க தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்துகிறது.