Biden India Visit: இந்தியாவை விசிட் அடிக்க போகும் அமெரிக்க அதிபர் பைடன்..எப்போது தெரியுமா?
ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வருகை தர உள்ளதால் தற்போது முதல் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 1991ஆம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தங்கள் அமல்படுத்தியதில் இருந்து மேற்குலக நாடுகளுடனான உறவில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டது. குறிப்பாக, இந்திய - அமெரிக்க நாடுகளுக்கிடையேயான உறவு, அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
இந்திய அமெரிக்க உறவு:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் இரு நாடுகளுக்கு இடையே போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம், இந்திய - அமெரிக்க உறவில் திருப்புமுனை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, மோடி தலைமையில் அமைந்த பாஜக அரசும், அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டி வருகிறது.
குறிப்பாக, கடந்த ஜூன் 20ஆம் தேதி, அரசு முறை பயணமாக, பிரதமர் மோடி அமெரிக்கா சென்றது இரு நாட்டு உறவில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. பயணத்தின்போது, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதுமட்டும் இன்றி, இரு நாடுகளுக்கு இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த நிலையில், வரும் செப்டம்பர் 7ஆம் தேதி, ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவிற்கு வருகை தருகிறார் அமெரிக்க அதிபர் பைடன். இதை தொடர்ந்து, செப்டம்பர் 10 ஆம் தேதி வாஷிங்டனுக்கு திரும்புகிறார். ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வரும் நிலையில், அடுத்த மாதம் டெல்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது.
பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள உச்சி மாநாடு:
இந்த உச்சி மாநாட்டில், 110 நாடுகளை சேர்ந்த 12,300 பிரதிநிதிகள் நேரடியாக கலந்து கொள்ள உள்ளனர். டெல்லியில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டில்தான் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான பிரிதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியாவில் நடைபெறும் உச்ச மாநாட்டில் கலந்து கொள்ள எதிர்நோக்கி காத்து கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் பைடன் கடந்த ஜூன் மாதம் கூறியிருந்தார்.
அப்போது, மோடியும் பைடனும் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், ஜி 20 அமைப்பில் தலைமை பொறுப்பு வகிக்கும் இந்தியாவை பாராட்டுவதாக பைடன் தெரிவித்தார். பன்னாட்டு நிறுவனங்களை வலுப்படுத்துவதில் இந்தியாவின் தலைமை புதிய கவனத்தை செலுத்தும். காலநிலை மாற்றம், தொற்றுநோய், மோதல் போன்ற உலகளாவிய சவால்களைச் சமாளிக்க சர்வதேச ஒத்துழைப்பைக் கொண்டு வந்துள்ளது வலுவான, நிலையான, சமநிலையான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைக்கிறது" என குறிப்பிடப்பட்டது.
ஜி-20 அமைப்பு என்றால் என்ன?
உலக பொருளாதாரம், சர்வதேச நிதி ஸ்திரத்தன்மை, காலநிலை மாற்றம், நிலையான வளர்ச்சி போன்ற விவகாரங்களை எதிர்கொள்வதற்காக ஜி-20 அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்தோனேசியாவிடம் இருந்த அதன் தலைமை பொறுப்பை இந்தியா, கடந்தாண்டு டிசம்பர் 1ஆம் தேதி ஏற்று கொண்டது.