2024-இல் பாஜகவை வீழ்த்த இதுதான் ஃபார்முலா...ரகசியம் சொல்லும் உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ்..!
தேசிய அளவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ள உத்தர பிரதேசத்தில் யார், பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றுகிறார்களோ அவர்களே மத்தியல் ஆட்சி அமைத்து வருகின்றனர்.
கடந்த இரண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ளது. பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி பாஜக அசுர பலத்தில் உள்ளது. இச்சூழலில், இன்னும் 9 மாதங்களில் அடுத்த மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.
சூடுபிடிக்கும் தேர்தல் களம்:
தேர்தலுக்கு முன்னதாகவே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்தாண்டு பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது.
மூன்று மாநிலங்களிலும் பாஜக மற்றும் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சி அமைத்தது. அதற்கு அடுத்தபடியாக, கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. பாஜகவை வீழ்த்த பல்வேறு கட்சிகள் வியூகம் அமைத்து வரும் நிலையில், கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி எதிர்க்கட்சிகளுக்கு ஊக்கம் தந்தது.
இதனிடையே, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க பல்வேறு முயற்சிகள் நடந்து வருகிறது. அந்த வகையில், பிகாரில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம், மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. இதில், 18 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அதில், முக்கியத்துவம் வாய்ந்தவர் உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ்.
பாஜகவை வீழ்த்த பக்கா ஸ்கெட்ச்:
தேசிய அளவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ள உத்தர பிரதேசத்தில் யார், பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றுகிறார்களோ அவர்களே மத்தியல் ஆட்சி அமைத்து வருகின்றனர். நாட்டிலேயே அதிக மக்களவை தொகுதிகளை (80) கொண்டிருப்பதால்தான், உத்தர பிரதேசத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது பாஜக.
கடந்த முறையே, உத்தர பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த பெரிய கூட்டணி அமைக்கப்பட்டது. எதிரிக்கட்சிகளாக திகழ்ந்த, சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து 2019 தேர்தலை எதிர்கொண்டன. இருப்பினும், 80 தொகுதிகளில் 62 தொகுதிகளை வென்று பாஜக பெரிய வெற்றியை பதிவு செய்தது.
இந்த முறை, பாஜகவை வீழ்த்தி விட வேண்டும் என்ற முனைப்பில் சமாஜ்வாதி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள அக்கட்சியின் தலைவர் அகிலேஷ், "பெரிய தேசியக் கட்சிகள் எங்களை ஆதரித்தால் உ.பி.யில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக தோற்கடிக்கப்படும்" என்றார்.
தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், 2024இல் பாஜகவை எப்படி வீழ்த்துவது என்பது குறித்து தன்னுடைய ஃபார்முலாவை பகிர்ந்து கொண்டார். தேசிய ஜனநாயக கூட்டணியை (பாஜக தலைமையிலான கூட்டணி) பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினர் ஆகியோர் தோற்கடிப்பர் என அகிலேஷ் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து பேசிய அவர், "தன்னுடைய ஃபார்முலா உத்தர பிரதேசத்திற்கு மட்டுமே. 80 தொகுதிகளிலும் தோற்கடித்தால் பாஜக அகற்றிவிடலாம். ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் எந்தக் கூட்டணிக் கட்சி வலுவாக இருக்கிறதோ அதைக் கருத்தில் கொண்டு தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட வேண்டும்" என்றார்.