Election Commission : இந்திய தேர்தல் ஆணையத்திற்கு புதிய துணை தேர்தல் ஆணையர் நியமனம்..! யார் இந்த அஜய் பாது..?
Deputy Election Commissioner : இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையராக அஜய் பாது நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையராக அஜய் பாதுவை நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி வரை அவர் இந்தப் பதவியில் தொடர்வார்.
Just In: @AmdavadAMC commissioner Lochan Sehra appointed Joint Secretary, IN-SPACe, Ahmedabad. Ajay Bhadoo appointed as Deputy Election Commissioner of India. #bureaucracy
— Mahesh Langa (@LangaMahesh) October 2, 2022
மத்திய அரசுத் துறைகளில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 35 அரசுப் பணியாளர்கள் இணைச் செயலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேச கேடரின் 1998 பேட்ச் ஐஏஎஸ் அலுவலரான ஆகாஷ் திரிபாதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் MyGov, தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் கேடரின் 2005 பேட்ச் ஐஏஎஸ் அலுவலரான பசந்த் கார்க், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் கீழ் தேசிய சுகாதார ஆணையத்தின் கூடுதல் தலைமை நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குஜராத் கேடரின் 2002 பேட்ச் ஐஏஎஸ் அலுவலரான லோச்சன் செஹ்ரா, அகமதாபாத்தில் உள்ள இந்திய தேசிய விண்வெளி வளர்ச்சி மற்றும் அங்கீகார மையத்தின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குஜராத்தை சேர்ந்த அஜய் பாது, 1999ஆம் ஆண்டு ஐஏஎஸ் அலுவலராக பதவியில் சேர்ந்தார். ஜூலை 2018 முதல் வதோதராவின் நகராட்சி ஆணையராக பதவி வகித்து வந்தார். மேலும், வதோதரா நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (VUDA) தலைவராகவும் இருந்துள்ளார்.
பாது தனது சிவில் சர்வீசஸ் வாழ்க்கையை சூரத்திலும் பின்னர் ஜூனாகத்திலும் உதவி கலெக்டராக தொடங்கினார். கடந்த 19 ஆண்டுகளாக பல்வேறு பதவிகளில் பணியாற்றிய அவர், கலெக்டர், முனிசிபல் கமிஷனர் மற்றும் குஜராத் முதலமைச்சரின் செயலாளர் போன்ற பதவிகளை வகித்துள்ளார். 2008 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக இரண்டு முறை சிறந்த கலெக்டர் விருது பெற்றார்.
அவரது முயற்சியின் கீழ் 2003-04 ஆம் ஆண்டில் பரூச் மாவட்டத்தில் அரசு ஊழியர்களுக்காக பயோமெட்ரிக் வருகை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னோடித் திட்டமாகப் பார்க்கப்பட்ட இந்த முயற்சி மகத்தான அங்கீகாரத்தையும் விருதுகளையும் பெற்றது.
மெஹ்சானா மாவட்ட கலெக்டராக இருந்த போது, பாது, மாவட்டத்தில் நீர் பாதுகாப்பு, நில பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் ஆன்லைன் கோப்பு கண்காணிப்பு, பொது நூலகங்களின் மறுமலர்ச்சி மற்றும் மதிய உணவு சமையலறைகளை நவீனமயமாக்குதல் தொடர்பான முயற்சிகளை மேற்கொண்டார்.