ஏசி ஒர்க் ஆகல.. ஏர் இந்தியா விமானத்தால் கடுப்பான பயணிகள்.. இனியும் பொறுக்க முடியாது
ஏர் இந்தியா விமான நிறுவனம் மீது பயணிகள் புகார் கூறுவது தொடர் கதையாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தான் பயணம் செய்த ஏர் இந்தியா விமானத்தில் ஏசி சரியாக வேலை செய்யவில்லை என பயணி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருந்து புவனேஸ்வர் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஏசி சரியாக வேலை செய்யவில்லை என பயணி ஒருவர் புகார் கூறியுள்ளார். இதன் காரணமாக, விமானப் பயணத்தின் நடுவில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் மிகுந்த அசௌகரியத்தை எதிர்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
ஏர் இந்தியாவை சுத்துபோடும் பயணிகள்:
ஏர் இந்தியா விமான நிறுவனம் மீது பயணிகள் புகார் கூறுவது தொடர் கதையாகி வருகிறது. உடைந்த இருக்கைகள், தாமதமான விமானங்கள் உள்பட பல காரணங்களால் ஏர் இந்தியா விமான நிறுவனம் பெரும்பாலும் பயணிகளிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொள்கின்றன.
சமீபத்தில் கூட, தனக்கு உடைந்த இருக்கையை ஒதுக்கியதற்காக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் கோபத்தை ஏர் இந்தியா எதிர்கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, தான் பயணம் செய்த ஏர் இந்தியா விமானத்தில் ஏசி சரியாக வேலை செய்யவில்லை என பயணி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த முறை ஏசி ஒர்க் ஆகல:
டெல்லியில் இருந்து புவனேஸ்வர் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் தான் பயணம் செய்ததாகவும் அப்போது நடுவானில் ஏசி வேலை செய்யாமல் போனதாக துஷர்காந்த் ராவத் என்பவர் லிங்க்ட் இன் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
காற்றோட்டம் இல்லாத காரணத்தால் பயணிகள் தங்கள் சட்டைகளைக் கழற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் நாளிதழ்களை பயன்படுத்தி தங்களுக்கு தாங்களே காற்று வீசி கொண்டதாகவும் துஷர்காந்த் ராவத் குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். "ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனக் குழுவிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து இந்த சூழ்நிலையை முன்னுரிமையாகவும், தீவிரமான விஷயமாகவும் எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலை ஒருபோதும் ஏற்படாது" என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏர் இந்தியா அளித்த விளக்கம்:
இதற்கு விளக்கம் அளித்த ஏர் இந்தியா விமான நிறுவனம், "துஷர்காந்த், உங்கள் விமானப் பயணத்தின் போது ஏற்பட்ட தாமதம் மற்றும் அசௌகரியத்திற்கு வருந்துகிறோம். விமான தரையிறக்கத்தின்போதும் விமானம் கிளம்பும்போதும், ஏசி குறைவான செயல்திறன் கொண்டதாக உணரப்படலாம்.
ஆனால், விமானம் புறப்பட்ட பிறகு அது முழுமையாக செயல்படும். உங்கள் பயணத்தை முடித்தவுடன், உங்கள் கருத்துகளுக்கு நாங்கள் உண்மையிலேயே நன்றி தெரிவிக்கிறோம். அடுத்த முறை சிறந்த அனுபவத்திற்காக எங்கள் சேவைகளை மேம்படுத்துவதில் உறுதியாக இருக்கிறோம்" என குறிப்பிட்டுள்ளது.
ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பிரச்னையாக மாறி, விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கும் அளவுக்கு சென்றது. இந்த சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக விமான பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் பிரச்னையாக வெடித்தது. விமானத்தில் நாள்தோறும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்து வருகின்றன.





















