மம்தாவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஷாக்.. I.N.D.I.A கூட்டணிக்கு எண்ட் கார்ட் போட்ட ஆம் ஆத்மி..!
கூட்டணியில் இடம்பெற்ற போதிலும், தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்னையில் காரணமாக தனித்து போட்டியிடுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மியும் அறிவித்துள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A கூட்டணியை உருவாக்கின. தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடிபிடிக்க தொடங்கிவிட்டது.
முடிவுக்கு வருகிறதா I.N.D.I.A கூட்டணி?
அந்த வகையில், பல்வேறு மாநிலங்களில் INDIA கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முடிந்தவரையில், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சி சார்பில் ஒரே வேட்பாளரை களமிறக்க INDIA கூட்டணி திட்டமிட்டு வருகிறது.
ஆனால், மேற்குவங்கம், கேரளா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கூட்டணி பேச்சுவார்த்தை கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏன் என்றால், மேற்குறிப்பிட்ட 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என உள்ளூர் காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடுவோம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் அம்மாநில முதலமைச்சருமான மம்தா அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து, தற்போது பஞ்சாப் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. I.N.D.I.A கூட்டணியில் இடம்பெற்ற போதிலும், தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்னையில் காரணமாக தனித்து போட்டியிடுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மியும் அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு ஷாக் கொடுத்த கூட்டணி கட்சிகள்:
மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடுவோம் என அறிவித்துள்ள மம்தா, "காங்கிரஸ் கட்சியுடன் நான் எந்த ஆலோசனையும் செய்யவில்லை. மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவோம் என்றே நான் கூறி வருகிறேன். நான் அவர்களுக்கு (காங்கிரஸ்) பல திட்டங்களை முன்வைத்தேன். ஆனால், அவர்கள் நிராகரித்து விட்டனர். நாட்டின் மற்ற பகுதிகளில் என்ன நடக்கும் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால், நாங்கள் ஒரு மதச்சார்பற்ற கட்சி, வங்காளத்தில் நாங்கள் மட்டுமே பாஜகவை தோற்கடிப்போம்" என்றார்.
அதேபோல, பஞ்சாப் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பகவந்த் மான் கூறுகையில், "பஞ்சாபில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளுக்கு 40 வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி தேர்வு செய்துள்ளது. வேட்பாளர்களை இறுதி செய்வதற்கு முன் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்" என்றார்.
திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் எடுத்துள்ள நிலைபாடு குறித்து காங்கிரஸ் இன்னும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. I.N.D.I.A கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே பிரச்னை நிலவி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. மேற்குவங்கம், பஞ்சாபை தவிர்த்து உத்தர பிரதேசத்திலும் சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே பிரச்னை நிலவி வருவதாக கூறப்படுகிறது.