"எங்கள் மீது தாக்குதல் நடத்தாதீங்க" - தொடரும் வன்முறைக்கு மத்தியில் மக்களிடம் கெஞ்சி கேட்டு கொண்ட மணிப்பூர் முதலமைச்சர்..!
வன்முறையால் சிக்கி தவித்து வரும் மணிப்பூரில் மக்கள் பிரதிநிதிகள் மீது அடையாளம் தெரியாத கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மாநில, மத்திய அமைச்சர்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் நடந்த நிலையில், பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்னையை தீர்க்க மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் அழைப்பு விடுத்துள்ளார். மக்கள் பிரதிநிதிகள் உள்பட யார் மீதும் தாக்குதல் நடத்த வேண்டாம் என அவர் மக்களை கேட்டு கொண்டார்.
மாநில அமைச்சர் வீட்டை அடித்து நொறுக்கிய கும்பல்:
வன்முறையால் சிக்கி தவித்து வரும் மணிப்பூரில் மக்கள் பிரதிநிதிகள் மீது அடையாளம் தெரியாத கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த புதன்கிழமை, விஸ்ணுபுரம் மாவட்டத்தில் பிரிவினைவாத குழு ஒன்று, அப்பாவி ஒருவரை சுட்டு கொன்ற சம்பவம் மீண்டும் கலவரம் வெடிக்க காரணமாக அமைந்தது.
குகி பழங்குடி சமூகத்திற்கு பாதுகாப்பு வழங்க தவறிய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் விதமாக மணிப்பூர் பொதுப்பணித்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கோவிந்தாஸின் வீடு அடித்து நொறுக்கப்பட்டது. அமைச்சரும் அவரது குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில், அவரது வீட்டில் சுமார் 100 பேர் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, வீட்டை அவர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.
சூறையாடப்பட்ட மத்திய அமைச்சரின் வீடு:
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் வியாழக்கிழமை நடந்த மற்றொரு வன்முறை சம்பவத்தில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஆர்.கே. ரஞ்சன் சிங்கின் வீட்டுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத கும்பல் அதனை சூரையாடினர். இந்த இரண்டு சம்பவங்களும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பிரேன் சிங் மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அல்லது யார் மீதும் எந்த விதமான வன்முறையைிலும் ஈடுபட வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். எம்எல்ஏக்களான நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். நாங்கள் மக்களுக்காக இருக்கிறோம். மக்கள் விரும்புவதை நாங்கள் செய்வோம். அது உறுதி.
எதற்காக வேண்டுமானாலும் எங்களிடம் வரலாம். நாங்கள் 24 மணி நேரமும் இங்கே இருக்கிறோம். மக்கள் என்னிடமோ அல்லது எனது சக அமைச்சர்களிடமோ பேசி தங்கள் குறைகளை பகிர்ந்து கொள்ளலாம்.
மக்களிடம் கெஞ்சிய முதலமைச்சர்:
மணிப்பூரில் நிலவும் தீவிரம் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மற்றும் பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா ஆகியோரை வியாழக்கிழமை இம்பாலுக்கு வர செய்தது. அமைதியையும் இயல்புநிலையையும் கொண்டுவருவதற்காக அவர்கள் பல்வேறு சிவில் சமூக அமைப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.
மணிப்பூரில் உள்ள பிரச்னைகள் மிகவும் சிக்கலானவை. அரசியலமைப்பு விதிகள் மற்றும் விவாதங்கள் மூலம் மட்டுமே தீர்க்கப்பட முடியும். இந்த இக்கட்டான காலங்களில் எந்த ஒரு பிரிவினையையும் நாம் அனுமதிக்கக் கூடாது. போலீசாரிடம் இருந்து துப்பாக்கிகளை கொள்ளையடித்தவர்களை மீட்டுத் தருமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்" என்றார்.
மே 3, 4 தேதிக்கு இடைப்பட்ட இரவு முதல் மணிப்பூரில் சுமார் 34,000 ராணுவ வீரர்கள் மற்றும் துணை ராணுவப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளனர். இம்பால் பள்ளத்தாக்கிலிருந்து மலைப்பகுதிகளை பிரிக்கும் பகுதிகளில் வன்முறையால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் 38 இடங்களில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.