காங்கிரஸ் தலைவர் தேர்தல்...காந்தி குடும்பத்தின் ஆசியோடு களமிறங்குகிறாரா மூன்றாவது வேட்பாளர்?
சசி தரூருக்குப் பிறகு, ஜி-23 குழுவில் இருந்து மூத்த தலைவர் ஒருவர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் தேர்தல் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்திருந்தார்.
கெலாட்டுக்கு ஆதரவான எம்எல்ஏக்கள், ராஜஸ்தானில் தலைமைக்கு எதிரான நிலைபாட்டை எடுத்த நிலையில், அதற்கு தார்மீக பொறுப்பை ஏற்று இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் ராஜஸ்தானில் ஏற்பட்ட நெருக்கடிக்காக சோனியா காந்தியிடம் மன்னிப்பு கோரியதாகவும் தெளிவுப்படுத்தியுள்ளார். டெல்லியில் சோனியை காந்தியை சந்தித்ததை அடுத்து, கெலாட் செய்தியாளர்களிடம் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "அவர் முதலமைச்சராக நீடிப்பாரா என்பதை சோனியா காந்தி தான் முடிவு செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். மன்னிப்பு கோரியதன் மூலம் முதலமைச்சர் பதவியை அசோக் கெலாட் தற்போதைக்கு தக்க வைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதியின் காரணமாக முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்.
காங்கிரஸ் மேலிடம், இளம் தலைவர் சச்சின் பைலட்டுக்கு முதலமைச்சர் பதவியை அளிக்க திட்டமிட்டிருந்தனர். முதலமைச்சர் பதவியை சச்சின் பைலட்டுக்கு அளித்தால் ராஜினாமா செய்து விடுவோம் என கெலாட்டுக்கு ஆதரவாக உள்ள 90 எம்எல்ஏக்கள் மிரட்டல் விடுத்தனர். இதற்கு பின்னணியில் கெலாட் இருந்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியானது.
ராாகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு நடுவில் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய அசோக் கெலாட் மீது காங்கிரஸ் தலைமை கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. கெலாட், முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க மறுத்தது தலைமைக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
கெலாட்டுக்கு நெருக்கமான மூன்று அமைச்சர்கள் கட்சியின் உத்தரவுக்கு எதிராக திரண்டிருந்த போதிலும், தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில், சசி தரூருக்குப் பிறகு, ஜி-23 குழுவில் இருந்து மூத்த தலைவர் ஒருவர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அவர் அதிகாரப்பூர்வ வேட்பாளராக களமிறங்கப்படலாம் என்பதுதான்.
தொடர் தோல்விகளை சந்தித்ததையடுத்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் 23 பேர் கட்சியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளக் கோரி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இவர்கள்தான், ஜி-23 தலைவர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.
கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவரான வாஸ்னிக், 2020 ஆம் ஆண்டின் வாக்கில், அந்தக் குழுவிலிருந்து தன்னை விலக்கி கொள்ள ஆரம்பித்தார். இதையடுத்து, கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலே அவர் தொடர்ந்தார். இந்த ஆண்டு அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட் கூட வழங்கப்பட்டது.
மல்லிகார்ஜுன் கார்கே, திக்விஜய சிங் போன்ற மூத்த தலைவர்களை தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வைக்க காங்கிரஸ் பரிசீலித்து வந்தது.
வேட்பு மனுவை வாங்க வந்த திக் விஜய் சிங் தனது வேட்பு மனுவை நாளை தாக்கல் செய்ய போவதாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில், ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியை அசோக் கெலாட் ராஜினாமா செய்ய மறுத்த நிலையில் தான் போட்டியிட போவதாக அறிவித்தார்.
தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய நாளையே கடைசி தினமாகும். தற்போதுவரை, திக் விஜய சிங்கும் சசி தரூரும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இருவரும், நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.