Adani-Hindenburg Issue: அதானி விவகாரத்தில் அவகாசம் கேட்ட செபி.. 6 மாதம் தருமா உச்சநீதிமன்றம்..? அதானி குழுமம் வரவேற்பு!
அதானி மீதான புகார்களை விசாரிக்க இன்னும் கூடுதலாக 6 மாதங்கள் வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் செபி அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளது.
அமெரிக்க குறுகிய விற்பனையாளர் நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த ஜனவரி 25ம் தேதி அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்ததாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
வெளியான இந்த அறிக்கையை தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் கடுமையாக சரிந்தது. அதானி விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டது.
இதையடுத்து, அதானி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் பங்குச்சந்தையில் விதிகளை முறைப்படுத்த உச்சநீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி அபய் மனோகர் சப்ரே தலைமையிலான நிபுணர் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி உத்தரவிட்டது. இந்த நிபுணர் குழுவில், ஓ.பி.பட் (எஸ்பிஐ (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) இன் முன்னாள் தலைவர் ஆவார்) , ஓய்வுபெற்ற நீதிபதி ஜே.பி.தேவ்தத், நந்தன் நிலேகனி( நந்தன் நிலேகனி, இணை நிறுவனர் - இன்ஃபோசிஸ், பல உயர் நிர்வாக பதவிகளை வகித்துள்ளார்), சோமசேகரன் சுந்தரேசன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
தொடர்ந்து, இந்த நிபுணர் குழு அதன் அறிக்கையை இன்னும் 2 மாதங்களுக்குள் (அதாவது மே 2ம் தேதி) சீல் செய்யப்பட்ட உறையில் உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று தெரிவித்தது. இந்த சூழலில் அதானி மீதான புகார்களை விசாரிக்க இன்னும் கூடுதலாக 6 மாதங்கள் வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் செபி அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து செபி அளித்த மனுவில், “அதானி குழுமம் தொடர்பாக நாங்கள் அளிக்கப்பட வேண்டிய அறிக்கை நியாயமானதாகவும், சரியானதாகவும் இருக்க வேண்டும். அதானி குழும விவகாரத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் 12 பரிவர்த்தனைகள் மிகவும் சிக்கலானதாக இருக்கிறது. இந்த பரிவர்த்தனைகளின் கீழ் பல்வேறு துணை பரிவர்த்தைகள் இருப்பதாகவும், இவற்றை விசாரிக்க பல்வேறு தகவல்களை சேகரிக்க வேண்டும்.
எனவே, அதானி விவகாரத்தை விசாரிக்க இன்னும் 6 மாதங்கள் வேண்டும்” என தெரிவித்திருந்தது. மேலும், அந்த அறிக்கையில், அதானி மீதான குற்றச்சாட்டிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தது.
இப்படியான நிலையில், செபி விசாரணைக்கு அதானி குழுமம் வரவேற்பு அளித்துள்ளது. இது தொடர்பாக அதானி குழுமத்தின் செய்தி தொடர்பாளர் பேசுகையில், ” உச்சநீதிமன்றம் நியமித்துள்ள நிபுணர் குழுவின் விசாரணையை நாங்கள் வரவேற்கிறோம். எல்லா சட்டங்களையும், விதிமுறைகளையும், ஒழுங்குமுறையகளையும் நாங்கள் கடைப்பிடித்துள்ளோம். இந்த விசாரணையின் மூலம் உண்மை வெல்லும். செபி விசாரணைக்கு எங்களது முழு ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை தருவோம்” என்று கூறியிருந்தார்.