(Source: ECI/ABP News/ABP Majha)
அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம்... செபியின் கோரிக்கை ஏற்கப்படுமா? உச்ச நீதிமன்றத்தின் முடிவு என்ன?
அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை குறித்தும் அதானி குழுமம் ஏதேனும் விதி மீறலில் ஈடுபட்டதா என்பது பற்றியும் ஆராய இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு (செபி) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம் கடந்த 2 அண்டுகளாக, அதானி குழுமத்தின் முன்னாள் நிர்வாகிகள், அதிகாரிகள், பங்குதாரர்கள் என பலரிடம் கருத்துக்களைக் கேட்டு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.
ஹிண்டன்பர்க் அறிக்கை:
அதில், ”அதானி குழுமம் பங்குசந்தையில் ஏராளமான மோசடி வேலைகள் செய்துள்ளது. ரூ.17.80 லட்சம் கோடி மதிப்பிலான தொகைக்கு அதானி குழுமம் பங்குச்சந்தையில் மோசடி செய்து, பங்குகளை திருத்தியுள்ளது” என குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அதானி குழுமம் மறுத்து வருகிறது.
ஆனால், அறிக்கை வெளியானதன் விளைவாக, அதானி கழுமம் பெரிய அளவில் இழப்பை சந்தித்தது. பங்கு சந்தையில், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக அதானி குழுமம் இழப்பை சந்தித்திருப்பதாக தகவல் வெளியானது.
அறிக்கை தாக்கல் செய்த நிபுணர் குழு:
பங்கு சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கிய இந்திய முதலீட்டாளர்கள் பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளனர். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கடந்த மார்ச் 2ஆம் தேதி, இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை குறித்தும் அதானி குழுமம் ஏதேனும் விதி மீறலில் ஈடுபட்டதா என்பது பற்றியும் ஆராய இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு (செபி) உத்தரவிட்டது. இரண்டு வார காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
அதேபோல, இதுபோன்ற சூழல் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்கும் வகையில் இந்திய பங்கு சந்தையின் முதலீட்டாளர்களை பாதுகாப்பது தொடர்பாக ஆராய நிபணர் குழு ஒன்றையும் உச்ச நீதிமன்றம் அமைத்தது. கடந்த வாரம், நிபுணர் குழு தங்களின் அறிக்கையை தாக்கல் செய்தது.
உச்ச நீதிமன்றத்தின் முடிவு என்ன?
காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க செபி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கிடையே, விசாரணையை முடிப்பதில் செபி தவறிழைத்ததாக உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர்கள் தெரிவித்தனர்.
செபிவின் கோரிக்கையை ஏற்று காலக்கெடு நீட்டிக்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது குறித்து முடிவு வரும் திங்கள்கிழமை அன்று எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. காலக்கெடுவை நீட்டிக்க ஒப்புதல் தெரிவிப்பது போலதான் நீதிபதிகள் பேசியுள்ளனர்.
செபி தவறிழைந்ததாக மனுதாரர்கள் குறிப்பிட்டதற்கு பதில் அளித்து பேசிய உச்ச நீதிமன்றம், "நீதிமன்றம் நியமித்த கமிட்டியின் அறிக்கை இன்னும் திறக்கப்படாமல் இருக்கும் போது நீங்கள் சொல்வது நியாயமற்றது. அத்தகைய அறிக்கைகளை வெளியிடுவதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இது சந்தையின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும்" என தெரிவித்தது.