Sepsis: சரத்பாபு உயிரிழப்புக்கு காரணம் செப்சிசா..? அப்படி என்றால் என்ன? தப்பிப்பது எப்படி?
செப்சிஸ்(Sepsis) நோய் என்றால் என்ன? அதில் இருந்து தப்பிப்பது எப்படி? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகராக உலா வந்த சரத்பாபு(Sarath Babu) இன்று காலமானார். அவரது உயிரிழப்புக்கு செப்சிஸ்(Sepsis) பாதிப்பே காரணம் என்று தகவல்கள் வெளியாகியும் வந்தது. அவரது உயிரிழப்பு தொடர்பாக மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. இந்த நிலையில், செப்சிஸ் என்றால் என்ன? அதன் பாதிப்புகள் குறித்து கீழே காணலாம்.
செப்சிஸ்(Sepsis) என்றால் என்ன?
செப்சிஸ் அல்லது செப்டிசீமியா என்பது உயிருக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நிலை. மற்றொரு தொற்றுநோய் மூலம் பாக்டீரியா இரத்தத்தில் நுழைந்து உடல் முழுவதும் பரவும்போது இது நிகழ்வதாக சொல்லப்படுகின்றது. இது உடல் நிலையை கடுமையாக பாதிப்பதால், மருத்துவமனையில் அவசர சிகிச்சை தேவைப்படுகிறது. இது விரைவாக திசுக்களை சேதப்படுத்துவதுடன், உறுப்பு செயலிழப்பு அல்லது மரணத்திற்கு வழிவகுக்கும்.
செப்சிஸ் பாதிப்பு
செப்சிஸ் வயதானவர்கள், மிகவும் சிறியவர்கள் மற்றும் நீண்ட கால நோயால் பாதிக்கப்பட்டவர்களை அதிகம் பாதிக்கிறது. சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் தோல், சிறுநீர் பாதை, நுரையீரல் அல்லது பிற நோய்த்தொற்றுகள் ஆகியவற்றில் தொற்று ஏற்பட்டால், செப்சிஸ் அபாய அதிகரிக்கலாம்.
செப்சிஸின் பொதுவான அறிகுறிகள் | Sepsis Symptoms
மந்தமான பேச்சு, அசாதாரண மன மாற்றங்கள், மரண பயம், வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு , மிகக் குறைந்த சிறுநீர் கழித்தல், உடலில் தீவிர ஒட்டு மொத்த அசௌகரியம், குளிர், மங்கலான தோல் மற்றும் சுயநினைவு இழப்பு ஆகியவை செப்சிஸின் அறிகுறிகள் ஆகும்.
தற்காப்பது எப்படி?
சரியான சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும். கைகளை தவறாமல் கழுவவும். வழக்கமான குளியல் எடுத்து கொள்ள வேண்டும், கீறல்கள் மற்றும் வெட்டுக்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.
நடிகர் சரத்பாபு காலமானார்
சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களாகவே சரத் பாபு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். அவர் இறந்துவிட்டதாக மே 3ஆம் தேதி தகவல் வெளியான நிலையில், அந்தத் தகவலை சரத் பாபுவின் சகோதரி மறுத்தார். இதற்கிடையே தொடர் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு, இன்று (மே, 22) பிற்பகல் 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
உடல் சென்னையில் தகனம்?
அவரின் உடல் சென்னை, தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டுவரப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து நாளை (மே 23ஆம் தேதி) அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க