ABP Summit PM Modi: “இனி இந்தியாவின் தண்ணீர் நாட்டின் நலனுக்காக பாயும்“ ஏபிபி உச்சிமாநாட்டில் பிரதமர் சூளுரை...
PM Modi - ABP India@2047 Summit: டெல்லியில், ABP குழுமம் நடத்திய 2047-ல் இந்தியா என்ற உச்சிமாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இனி இந்தியாவின் தண்ணீர் நாட்டின் நலனுக்காக பாயும் என்று கூறினார்.

பிரதமர் மோடியின் விக்சித் பாரத் 2047-ஐ தழுவி, இந்தியாவின் சிறந்த செய்தித் தொலைக்காட்சிகளில் ஒன்றான ABP நெட்வொர்க், 2047-ல் இந்தியா (India @2047 Summit) என்ற உச்சிமாநாட்டை டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடத்தியது. இந்திய சுதந்திர நூற்றாண்டின் 2047 ஆம் ஆண்டிற்குள், இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான பாதை குறித்து இந்த உச்சிமாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார்.
வங்கித்துறை குறித்து பேசிய பிரதமர்
உச்சிமாநாட்டில், வங்கித்துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் குறித்து எடுத்துரைத்த பிரதமர் மோடி, இந்திய வங்கிகள் சாதனை அளவிலான லாபத்தில் இருப்பதாகவும், முதலீட்டாளர்களுக்கு பயனளிக்கிறது என்றும் கூறினார். சிறிய வங்கிகளை, அவற்றின் பலத்தை அதிகரிக்க நாங்கள் ஒன்றிணைத்தோம் என கூறிய அவர், ஏர் இந்தியா மூழ்கிய விதத்தை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
முந்தைய அரசாங்கங்கள் முடிவெடுக்க பயந்தன என்றும், தாங்கள் நஷ்டத்திலிருந்த நாட்டை காப்பாற்றியதாகவும், ஏனென்றால், தங்களை பொறுத்தவரை தேச நலனே உயர்ந்தது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
“இனி இந்தியாவின் தண்ணீர் நாட்டின் நலனுக்காக பாயும்“
இந்தியாவில், பல தசாப்தங்களாக நமது ஆறுகள் பதட்டங்களுக்கும், பிளவுகளுக்கும் மையமாக பயன்படுத்தப்பட்டன என்று சாடிய பிரதமர் மோடி, ஆனால் அவற்றை இணைக்கும் முயற்சியை நம் நாடு தொடங்கியது என்று கூறினார். முன்னதாக இந்தயாவின் தண்ணீர் மற்றவர்களுக்கு கொடுக்கப்பட்டது என்றும், இனி, இந்தியாவின் தண்ணீர் நாட்டின் நலனுக்காக பாயும் என்று கூறினார். இது, இந்தியாவின் நலன்களுக்காக நிறுத்தப்பட்டு, நாட்டுக்காக பயன்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
“டெல்லியில் அம்பேத்கர் தேசிய நினைவகத்தை கட்டியது பாஜக அரசு“
பல தசாப்தங்களுக்குப் பிறகு, புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டதாக மக்கள் அடிக்கடி குறிப்பிடுகிறார்கள், இருந்தாலும், அதிதாக விவாதிக்கப்படும் ஒரு விஷயம் என்னவென்றால், பல தசாப்தங்கள் காத்திருப்பிற்குப் பின், டெல்லியில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தேசிய நினைவகத்தை கட்டியது எங்கள் அரசுதான் என பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் இந்தியா புரட்சி குறித்து பேசிய மோடி
2047-க்குள், இந்த ‘விக்சித் பாரத்‘ பயணத்தில், ஒவ்வொரு அடியு முக்கியமானது என குறிப்பிட்ட பிரதமர் மோடி, 10 ஆண்டுகளுக்கு முன்பு தான் டிஜிட்டல் இந்தியா பற்றி பேசியபோது, மக்கள் ஏக்கங்களை வெளிப்படுத்தியதாகவும், தற்போது அது நம் வாழ்வின் எளிதான பகுதியாகிவிட்டதாகவும், குறைந்த விலை டேட்டா மற்றும் மேட்-இன்-இந்தியா ஸ்மார்ட் ஃபோன்களுடன் ஒரு புதிய புரட்சி பிறந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் இந்தியா மூலம் வாழ்க்கை வசதி அதிகரித்துள்ளதாகவும், இன்று, ஒரு கிராமத்தில் நன்றாக சமைக்கும் ஒரு பெண், கோடிக்கணக்கான சந்தாதாரர்களை கொண்டிருக்கிறார் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். யூடியூப் மட்டுமே இந்திய உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு (Content Creators) 21,000 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக தன்னிடம் ஒருவர் கூறியதாகவும், இதன் மூலம், அந்த ஃபோன், வெறும் தகவல் தொடர்பு கருவியாக மட்டுமில்லாமல், படைப்பாற்றல் மற்றும் சம்பாதிப்பதற்கான ஒரு கருவியாகவும் உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.





















