Delhi Mayor: 15 ஆண்டுகளுக்கு பின் பதவியை பறிகொடுத்த பா.ஜ.க...! டெல்லி மேயர் பதவியை கைப்பற்றிய ஆம் ஆத்மி..!
மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்ட டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிந்தது.
டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றார். மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்ட டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (பிப்.22) நடைபெற்று முடிந்தது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றார்.
#WATCH | AAP's Shelly Oberoi becomes #Delhi mayor with 150 votes pic.twitter.com/LLbAJ1Xh3D
— ANI (@ANI) February 22, 2023
இதன் மூலம் 15 ஆண்டுகளாக பாஜக வசமிருந்த டெல்லி மேயர் பதவி தற்போது ஆம் ஆத்மி வசம் சென்றுள்ளது. மேலும் 10 ஆண்டுகளுக்குப் பின் பெண் மேயராக ஷெல்லி ஓபராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆத் ஆத்மி கட்சி உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றது முதல், பாஜகவுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், கவுன்சிலர்கள் மத்தியில் நடைபெற்ற அமளி காரணமாக டெல்லி மேயர் தேர்தல் முன்னதாக மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக டெல்லி மாநகராட்சித் தேர்தலில் நியமன கவுன்சிலர்களும் வாக்களிப்பார்கள் என. டெல்லி துணை நிலை ஆளுநர் சக்ஸேனா தலைமையில் புதிய விதிமுறை கொண்டு வந்ததுடன், 10 நியமன கவுன்சிலர்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால் இந்த நியமன கவுன்சிலர்கள் அனைவரும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது.
இச்சூழலில் முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி சார்பில் தொடரப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்ட உத்தரவின்படி, பிப்.22 தேர்தல் தேதி இறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று நடைபெற்ற தேர்தலில் 34 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ரேகா குப்தாவை வீழ்த்தில் ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றார்.
ஷெல்லி ஓபராய் 150 இடங்களையும், ரேகா குப்தா 116 இடங்களையும் வென்ற நிலையில், ஓபராய் மற்றும் கட்சித் தொண்டர்களுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். "குண்டர்கள் தோற்றுவிட்டனர், பொதுமக்கள் வென்றனர். இன்று டெல்லி மாநகராட்சியில், டெல்லி மக்கள் வெற்றி பெற்றனர், போக்கிரித்தனம் தோற்கடிக்கப்பட்டது" என்று முன்னதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி 9 இடங்களை வென்று மூன்றாம் இடத்தில் உள்ளது. டெல்லி மாநகராட்சியின் புதிய மேயராகத் தேர்வான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஷெல்லி ஓபராய், தனது பதவிக்காலத்தில் கட்சியின் சித்தாந்தத்தை கடைபிடிப்பேன் என உறுதியளித்தார். மேலும், "கெஜ்ரிவாலின் 10 உத்தரவாதங்களை முதல் நாளிலிருந்து கடைபிடித்து, டெல்லியை குப்பையில்லா நகரமாக மாற்றும் பணியைத் தொடங்குவோம்" எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Class 1 Age: பெற்றோரின் கவனத்திற்கு! குழந்தைகளை 1ஆம் வகுப்பில் சேர்க்க கட்டுப்பாடு - மத்திய அரசு கூறும் வழிமுறைகள்!