Rahul Gandhi : அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஆதரவு..பாஜகவை போட்டு வெளுத்து வாங்கிய ஆம் ஆத்மி..!
ராகுல் காந்தி, இந்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டபோதே டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அதை தவறு என்று கூறியிருந்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு, கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரை மறைமுகமாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, "எப்படி, திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர் சூட்டுகிறார்கள்?" என கேள்வி எழுப்பியிருந்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு, மோடி சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருப்பதாக கூறி, குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு தொடர் பின்னடைவு:
இந்த அவதூறு வழக்கு 4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், திடீரென கடந்த மார்ச் 23ஆம் தேதி வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. நாடு முழுவதும் இந்த உத்தரவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த சூழலில், தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கை சூரத் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து, சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது.
ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி “சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது தான். அதில் தலையிட விரும்பவில்லை. அவருக்கு எதிராக குறைந்தது 10 கிரிமினல் வழக்குகள் உள்ளன” என தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் ராகுல் காந்தி தொடர் பின்னடைவுகளை சந்தித்து வரும் நிலையில், அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.
பாஜகவை போட்டு வெளுத்து வாங்கிய ஆம் ஆத்மி:
ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்த ஆம் ஆத்மி, "உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப பாஜக பயனற்ற அரசியலில்" ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இது நிச்சயமாக தவறு.
ராகுல் காந்தி, இந்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டபோதே டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அதை தவறு என்று கூறியிருந்தார்" என்றார்.
இந்த விவகாரத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கிறீர்களா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், "ஆம். இது நிச்சயமாக தவறு. ராகுல் காந்திக்கு கொடுக்கப்பட்ட தண்டனை மிகவும் கடுமையானது. இதை முன்னரும் சொன்னோம். அரவிந்த் கெஜ்ரிவாலும் இதையேதான் கூறினார். 50 கோடி மதிப்புள்ள காதலி என பிரதமர் நரேந்திர மோடியும் குறிப்பிட்டிருந்தார். இது அனைத்து பெண்களையும் புண்படுத்தக் கூடியது" என்றார்.