புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் உற்சவருக்கு தங்க கவசத்தால் அலங்காரம்...!
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் உற்சவருக்கு தங்க கவசம் அணிவித்து வழிபாடு
புதுச்சேரி மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பல்வேறு பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கமாக 500க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவது வழக்கமாக இருந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்க தடை விதிக்கப்பட்டது.
இதனால் விநாயகர் சிலைகள் செய்யும் மண்பாண்ட தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட புதுச்சேரி அரசு அனுமதியளித்துள்ளது. இதனை தொடர்ந்து புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. புதுச்சேரியை அடுத்த கூனிமேடு பகுதியில் விநாயகர் சிலை செய்யும் கூடத்தில் 3 அடி முதல் 15 அடி வரையிலான விநாயகர் சிலைகள் விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மணக்குள விநாயகர் கோயிலில் உற்சவமூர்த்தி தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம்:
புதுச்சேரியில், வங்க கடலை ஒட்டி கிழக்கு நோக்கி அமைந்து இருக்கிற மணக்குள விநாயகர் ஆலயம். ஆதியில் இந்த கோயில் பவனேஸ்வர் விநாயகர் ஆலயம் என்று அழைக்கப்பட்டு, தற்போது மணக்குள விநாயகர் கோவில் என்று அழைக்கப்பட்டு வருகிறாது. 8,000 சதுர அடி பரப்பில் இந்த கோயில் அமைந்துள்ளது.
புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டினர் குடியேறுவதற்கு முன்பிருந்தே இந்தக் கோயில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமையான ஆலயமான மணக்குள விநாயகரை புதுச்சேரி மக்கள் வெள்ளைக்காரன் விநாயகர் என்று தான் அழைக்கின்றனர். இந்தக் கோயிலை இடிப்பதற்கு பல முறை பிரான்ஸ் தூதர்கள் முயன்றார்கள் என்று கூறப்படுவது உண்டு. ஒவ்வொரு முறையும் உள்ளூர் மக்கள் இந்தக் கோயிலை காப்பாற்றி வந்துள்ளனர். இந்த ஆலயத்தில் 18 அடி உயர தங்கத் தகடு வேயப்பட்ட கொடிமரம் நடப்பட்டுள்ளது. இது இந்த கோயிலின் சிறப்புக்களில் ஒன்று. கோயிலின் வெளிப்புறச் சுவற்றில் பல்வேறு விதமான விநாயகர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. தங்க விமானம் இந்த கோயிலின் கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தில், விநாயகர் சித்தி, புத்திகளுடன் கிழக்குப் பார்த்து அமர்ந்து இருக்கிறார். கோயிலுக்கு தங்கரதம் உள்ளது. மரத்தினால் ஆன ரதம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. ரதத்திற்கு 7.5 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தசரா பண்டிகையின் போது இந்த ரதம் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். கோயிலில் நர்த்தன விநாயகரும் இடம் பெற்றுள்ளார். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் அருகே தொல்லைகாது சித்தர் சமாதி அடைந்துள்ளார்.
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி மிகவும் விசேஷமானது. உற்சவமூர்த்தி தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது, தொடர்ந்து பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.