உயிரிழந்த மகனை 90 கிமீ தூரம் மோட்டார் சைக்கிளில் எடுத்துச்சென்ற தந்தை: ஆந்திராவில் அவலம்
உயிரிழந்த மகனை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு 90 கிமீ தூரம் வரை டூவிலரில் பயணம் செய்து சென்றது அங்கே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் தந்தை ஒருவர் உயிரிழந்த மகனை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு 90 கிமீ தூரம் வரை டூவிலரில் பயணம் செய்து சென்றது அங்கே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகனின் மரணத்தால் துக்கத்தில் இருந்த தந்தை ஒருவர், திருப்பதியில் இருந்து 90 கி.மீ தொலைவில் உள்ள தனது கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளிலிலேயே தனது மகனின் உடலை சுமந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். திருப்பதியில் உள்ள எஸ்.வி.ஆர் ரூயா அரசு பொது மருத்துவமனையில் தனியார் ஆம்புலன்ஸ் நடத்துநர்கள் நோயாளிகள் மற்றும் இறந்தவர்களை ஏற்றிச் செல்வதற்குக் கட்டணம் குறைக்க மறுத்து வருகின்றனர். செவ்வாய் அதிகாலை இறந்த மகனை தனது கிராமத்துக்கு எடுத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் வாகன உதவியை அந்தத் தந்தை நாடினார்.
விலை உயர்வாக இருக்கவே கிராம மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச ஆம்புலன்ஸைக் கொண்டு மகனை எடுத்து வர முற்பட்டார். ஆனால் மருத்துவமனையில் உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அவருக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். வேறு வழியின்றி, அந்த நபர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்தபடி தனது மகனை தனது கைகளில் சுமந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் திருப்பதி நகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், மாவட்ட அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டனர். இந்த சம்பவத்திற்கு காரணமான 6 தனியார் ஆம்புலன்ஸ் ஆபரேட்டர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆந்திராவின் அன்னமையா மாவட்டம் சிட்வேலைச் சேர்ந்த ஜெசேவா என்பவர் சிறுநீரகக் கோளாறு காரணமாக திருப்பதியில் உள்ள எஸ் வி ஆர் ரூயா அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் திங்கள்கிழமை மாலை இறந்தார். அவரது தந்தை அவரை சொந்த கிராமத்திற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ய முயன்றார். ஆனால், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அதிக கட்டணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. செலவை தாங்க முடியாமல் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை உறவினர்களிடம் நிலைமையை தெரிவித்தார்.
சிட்வேலில் வசிக்கும் ஸ்ரீகாந்த் யாதவ், இதை அடுத்து இலவச ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்தார்,அவர்கள் உடலை இலவசமாக எடுத்துச் செல்ல ஒப்புக்கொண்டனர். ஆனால், மருத்துவமனையில் இருந்த தனியார் ஆம்புலன்ஸ் ஆபரேட்டர்கள், சிண்டிகேட் அமைத்து, மற்ற ஆம்புலன்சை மருத்துவமனைக்குள் நுழைய விடாமல் தடுத்து, விரட்டினர். உடலை ஆம்புலன்சில் கொண்டு செல்வதாக இருந்தால் அது தங்களுடையதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதை அடுத்து தனது உறவினரின் உதவியுடன் தனது மகனின் உடலை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றார் ஜெசேவாவின் தந்தை.
இந்தச் சம்பவம் குறித்து பதிலளித்த திருப்பதி எம்பி மட்டிலா குருமூர்த்தி, இது குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரித்து, சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கலெக்டரின் உத்தரவின் பேரில் ஆர்.டி.ஓ., அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.