Peer Ali Khan: அத்துமீறிய ஆங்கிலேயர்கள்.. புரட்சியாளர் ஆன புத்தக விற்பனையாளர்.. பீர் அலி கான் எனும் போராளி..!
பாட்னாவில் சுதந்திர போராட்டத்தை முன்னின்று நடத்திய போராட்ட வீரர் பீர் அலி கான் பற்றி இந்த கட்டுரையில் விரைவாக காணலாம்.
தாய்நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்வதே தேசத்தின் மீதுள்ள அன்புக்கு சான்று என்று ஆங்கிலேயப் படையை எதிர்த்துப் போராடியவர்களில் மிக முக்கியமானவர் பீர் அலி கான். பீகார் மாநிலத்தை மையமாக கொண்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சுதந்திரத்தாக போரானார். போராடியதோடு மட்டுமல்லாமல் தூக்கு கயிறை முத்தமிட்டு இறந்தும் போனார் பீர் அலிகான்.
பீர் அலிகானின் ஆராம்ப காலம்:
பீர் அலிகான் 1820ஆம் ஆண்டு பீகார் மாநிலம், அசாமாபாத் மாவட்டத்தில் உள்ள முகமதுபூர் கிராமத்தில் பிறந்தார். பீர் அலி கான் இளைஞனாக இருந்தபோது தனது அறிவின் தாகத்தை தணிக்க கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளார் என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. பின்பு அரபு, பாரசீகம் மற்றும் உருது ஆகிய மூன்று மொழிகளில் புலமை பெற்றுள்ளார்.
இறுதியாக பாட்னாவில் ஒரு புத்தக கடையை வைத்து தனது வாழ்க்கையை தொடங்கியுள்ளார். பாட்னாவில் நடக்கும் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் அத்துமீறல்களை பார்த்து கடும் கோபம் கொண்டார் பீர் அலி கான். தனது தாய்நாட்டிற்க்கு விடுதலை பெற்று தர வேண்டும் என்ற முனைப்புடன் இருத்தார் பீர்.
புத்தக கடையில் புரட்சியாளர்கள் உருவான போது:
1857ம் ஆண்டு பாட்னாவில் சுதந்திரத் தீ பரவி ஆங்காங்கே பெரும் கிளர்ச்சி வெடித்தது. ஆங்கிலேயரை எதிர்த்து உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் போராட் தொடங்கினார்கள். இப்போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஆங்கிலேயர் திணறினார்கள். பாட்னாவில் ஆங்கிலேயர்கள் படையை குவித்து கிளர்ச்சியாளர்கள் சிலரை சுட்டும் மற்றவர்களை சிறை பிடித்தும் போராட்ட நிலைமையை தன் கட்டுக்குள் கொண்டு வந்தது. இதற்கு முக்கிய காரணியாக செயல்பட்டதோடு, கிளர்ச்சிக்கு தனது புத்தக கடையை திட்டம் தீட்டும் மையமாக உபயோகித்துள்ளார் பீர் அலிகான். அது மட்டுமல்லாமல் ஆங்கிலேய ராணுவ முகாம் மீது தாக்குதல் தொடுத்தார் பீர் அலி கான். இச்செய்தி ஆங்கிலேயரை கடும் கோபம் அடைய செய்தது. அவரை சிறைப்பிடிக்க ஆங்கிலேய அரசால் உத்தரவு பிறப்பிக்கபட்டது.
தூக்கு மேடையிலும் நாட்டிற்காக சிந்தித்த பீர்:
இந்த வழக்கில் பீர் அலி கான் மற்றும் அவருடன் போராட்டத்தில் ஈடுப்பட்ட சிலரை ஆங்கிலேய அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. சிறைக்குள் அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டது. ஆங்கிலேய அதிகாரிகள் பீர் அலி கானை சித்திரவதை செய்தது. உடலில் காயங்களுடன் ரத்தம் வழிந்தபோதும் தேசத்தின் மீது உள்ள பற்று அவரை சுதந்திர முழக்கங்களை தொடர்ந்து முழங்க வைத்தது.
இதனால் கோபம் அடைந்த ஆங்கிலேய அரசு பீர அலி கான் உள்ளிட்ட சிலருக்கு மரண தண்டனை விதித்தது. தூக்கு மேடை மீது நின்ற போது ஆங்கிலேய அரசு வாய்ப்பு அளித்தது கிளர்ச்சியாளர்கள் பற்றி தகவல் கொடுத்தால் விடுவிக்கப் படுவாய் என்றார். பீர் அலி கான் நாட்டின் விடுதலைக்காக தூக்கு கயிற்றை முத்தமிட்டு 1857 ஜூலை 7 ஆம் தேதி வீர மரணம் அடைந்தார்.
அவரின் கடைசி வார்த்தைகளாக “நீங்கள் என்னை தூக்கிலிடலாம். ஆனால் என்னை போல் ஆயிரக்கணக்கானவர்கள் தினம் தினம் முளைத்து கொண்டே தான் இருப்பார்கள். உங்களின் நோக்கம் ஒரு போதும் எங்கள் நாட்டில் எடுபட போவது இல்லை. இனி மக்களின் அச்சமின்னையை காணப் போகிறீர்கள்” என்றார். வரலாறு நெடுகிலும் எத்தனையோ சுதந்திர போராட்ட வீரர்களை கொண்டாடும் நாம் பீர் அலி கான் எனும் தியாகியை மறந்து விட்டோம் என்பதே நிதர்சன உண்மை.