Accident: நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்... மகாராஷ்ட்ராவில் கோர விபத்து - 6 பேர் உயிரிழப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி பகுதியை சேர்ந்த பக்தர்கள் சிலர் ஒரு ஆம்னி பேருந்தில் அமர்நாத் யாத்திரைக்கு சென்றனர். அங்கிருந்து அவர்கள் ஹிங்கோலிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். பேருந்து மல்காபூர் பகுதியில் உள்ள நந்தூர் நாகா மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தது. எதிரே நாசிக் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்தபேருந்து முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றது.
நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்:
அப்போது எதிர்பாராதவிதமாக 2 ஆம்னி பேருந்துகளும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 19 பேர் பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்கள் புல்தானா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். லேசான காயம் அடைந்த 32 பயணிகளுக்கு அருகிலுள்ள குருத்வாராவில் முதலுதவி அளிக்கப்பட்டது.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே இரங்கல் தெரிவித்ததுடன், அவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கினார். மேலும், காயமடைந்தவர்களுக்கு புல்தானா மருத்துவமனையில் அரசு செலவில் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
மேலும் படிக்க,
அனுமதி இல்லாமல் ஸ்பா... பாலியல் தொழில்.. விஜய் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் அதிரடி கைது