இந்தியாவின் கடைசி 5 இடங்கள்.. உங்களுக்குத் தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
இந்தியா சுற்றுலாவுக்கு சிறந்த இடம். நம் நாட்டில் நாம் அனைவருமே எதிர்பாராத அளவுக்கு பல சுவாரஸ்யமான சுற்றுலா தலங்கள் உண்டு.
இந்தியா சுற்றுலாவுக்கு சிறந்த இடம். நம் நாட்டில் நாம் அனைவருமே எதிர்பாராத அளவுக்கு பல சுவாரஸ்யமான சுற்றுலா தலங்கள் உண்டு. இந்தியாவில் வடக்கிலிருந்து தெற்கு வரை 3000 கி.மீ, கிழக்கிலிருந்து மேற்கு வரை 3000 கிலோமீட்டர், கடற்கரையை ஒட்டி 7000 கி.மீ என மிக அழகிய நிலப்பரப்பு உண்டு. ஒவ்வொரு சில கிலோமீட்டரிலும் சீதோஷ்ண நிலையும், நிலப்பரப்பும் வித்தியாசப்பட்டு நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். செல்லுமிடமெல்லாம் விதவிதமான கலாச்சாரங்கள் வேறு நம்மை மகிழ்விக்கும்.
அப்படி இந்தியாவில் மிக முக்கியமான ஐந்து இடங்கள் பற்றி பார்ப்போம்.
1. இந்தியாவின் கடைசி கடை: இந்துஸ்தான் கி அந்திம் துகான்
இந்துஸ்தான் கி அந்திம் துகான் “Hindustan ki Antim Dukan,”. இந்தக் கடையின் பெயரிலேயே இதுதான் இந்தியாவின் கடைசி கடை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இந்தியா சீனா எல்லையில் இந்தக் கடை உள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் உத்தர்காண்ட் மாநிலத்தின் சமோலி பகுதியில் இது அமைந்துள்ளது. இந்தக் கடையை சந்தர் சிங் பட்வால் நடத்துகிறர். இவர் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கடையை தொடங்கினார். இது இமாலய மலையில் 3,118 மீட்டர் உயரத்தில் உள்ளது. சீன எல்லையில் இருந்து ஒரு சில மீட்டர் தூரத்தில் இந்தக் கடை உள்ளது.
2. இந்தியாவின் கடைசி கிராமம்: மனா கிராமம்
இந்தியாவின் கடைசி கிராமத்தின் பெயர் மனா. இது உத்தர்காண்ட் மாநிலத்தில் உள்ளது. முன்னதாக சித்குல் கிராமம் தான் கடைசி இந்திய கிராமமாக இருந்தது. இது சீனா, திபெத்திய எல்லையில் இருந்தது. இப்போது உத்தர்காண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமம் தான் இந்தியாவின் கடைசி கிராமமாக உள்ளது. பத்ரிநாத் அருகே இருக்கும் முக்கியமான சுற்றுலா தலமாக இது இருக்கிறது. சரஸ்வதி நதிக்கரையில் உள்ளது. 3219 மீட்டர் உயரத்தில் இந்த கிராமம் இருக்கிறது.
3. இந்தியாவின் கடைசி நிலப்பரப்பு: தனுஷ்கோடி
இந்தியாவின் கடைசி நிலப்பரப்பு நம் தமிழகத்தில் தான் உள்ளது. ஆம் தனுஷ்கோடி தான் இந்தியாவின் கடைசி நிலப்பரப்பு. இந்த இடத்தில் இருந்து இலங்கை வெறு 31 கிலோ மீட்டர் தூரம் தான். இது பாம்பன் தீவின் கடைசி முனை. 1964ல் ஏற்பட்ட புயலுக்குப் பின்னர் தனுஷ்கோடி நகரமே முழுமையாக சேதமடைந்து மக்கள் வாழும் தகுதியை இழந்தது.
4. கடைசி ரயில் நிலையம்: சிங்காபாத்
இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் சிங்காபாத் ரயில் நிலையம். இது மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்டத்தின் அருகே உள்ள ஹபீப்பூரில் உள்ளது. இது மேற்குவங்கம், வங்கதேசம் எல்லையில் உள்ளது. சுதந்திரத்திற்கு முன்னர் கட்டப்பட்டது இந்த ரயில் நிலையம். இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் இதுவே. இதைத் தாண்டி வேறு ரயில் நிலையம் இல்லை. அதேபோல் கிழக்கே கடைசி ரயில் நிலையம் தீன்சுகியா, தெற்கில் கடைசி ரயில் நிலையம் கன்னியாகுமரி. வடக்கில் கடைசி ரயில் நிலையம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாரமுல்லா ரயில் நிலையம்.
5. இந்தியாவின் கடைசி கடற்கரை:
இந்தியாவின் கடைசி கடற்கரை கன்னியாகுமரி. இதில் அரபிக்கடல், வங்கக்கடல், இந்தியப் பெருங்கடல் என முக்கடல்களும் சங்கமிக்கின்றன. இது ஒரு புனித தலமாகவும் இருக்கிறது.