Uttarkhand Tunnel Rescue: சக்சஸ்! 17 நாள்களுக்கு பிறகு மீட்கப்பட்ட உத்தரகண்ட் தொழிலாளர்கள்!
உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Uttarkhand Tunnnel Rescue: உத்தரகண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் ஒருவர் பின் ஒருவராக பத்திரமாக மீட்கப்பட்டனர்.
நாட்டையே உலுக்கிய சுரங்கப்பாதை விபத்து:
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பகுதி உள்ளது. அங்கு சுமார் 4 ஆயிரத்து 500 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 12ம் தேதி அந்த சுரங்கப்பாதையில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அடுத்தடுத்து மண் சரிவு ஏற்பட்டதால் சுரங்கப்பாதை முழுமையாக மூடிக் கொண்டது.
அப்போது, சுரங்கப்பாதைக்குள் பணியில் இருந்த 41 தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர். உள்ளே இருக்கும் தொழிலாளர்களுக்கு 6 இன்ச் குழாய் மூலம் உணவு, மருந்து என தேவையான பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன. சாதாரண உணவுகளை சாப்பிட்டால், இயற்கை உபாதைகளை கழிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால், மருத்துவர்கள் பரிதுரைக்கும் உணவுகள் மட்டும் வழங்கப்பட்டு வந்தது. மேலும், உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களின் மன அழுத்தத்தை போக்க ரம்மி, லூடோ, செஸ் ஆகியவை குழாய் மூலம் அனுப்பப்பட்டிருந்தன. இதோடு இல்லாமல், மன அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகளும் வழங்கப்பட்டிருந்தது.
490 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது:
இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் களமிறங்கி பல சவால்களை எதிர்கொண்டனர். ஆனால், மீட்புக் குழுவினர் ஒவ்வொரு முயற்சியின் போதும் ஒவ்வொரு நாளும் புதுப்புது சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. சுரங்கத்தில் துளையிடும் போது இயந்திர கோளாறு ஏற்பட்டு மீட்பு பணியில் தடை நீடித்தது. அதேபோல் துளையிடும் போது மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதால் மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இயந்திர கோளாறு என பல்வேறு சிக்கல் நடுவில் மீட்பு பணிகள் நடைபெற்றன.
All 41 workers trapped inside the Silkyara tunnel in Uttarakhand since November 12, have been successfully rescued. pic.twitter.com/xQq2EfAPuq
— ANI (@ANI) November 28, 2023
இந்நிலையில், 17வது நாளாக மீட்பு பணிகள் சுரங்கத்தில் இன்று நடைபெற்று முடிந்த நிலையில், 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் பின் ஒருவராக மீட்கப்பட்ட தொழிலாளர்களிடம் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மத்திய அமைச்சர் வி.கே.சிங் நலம் விசாரித்தார். இதனை அடுத்து, சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். தொழிலாளர்கள் காயமின்றி வெளியே வந்தாலும் கூட அவர்களுக்கு மன உளைச்சல், பதட்டம், பயம், அமைதியின்மை போன்ற பாதிப்புகள் ஏற்பட உள்ளது. மேலும், இரவில் அடிக்கடி எழுந்திருத்தல், பயங்கர கனவுகள் போன்ற பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், மருத்துவ சிகிச்சைக்கு பின்னரே இவர்கள் அனைவரும் வீடு திரும்புவார்கள். 490 மணி நேரத்திற்கு பிறகு சுரங்க தொழிலாளர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க ஆரம்பித்துள்ளனர்.