வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 78 எம்பிக்கள் சஸ்பெண்ட்.. ஸ்தம்பித்த நாடாளுமன்றம்
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு உள்ளிட்ட மூத்த எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த மேலும் 33 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சவுகதா ராய் உள்ளிட்ட மூத்த எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?
நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி மக்களவையில் போராட்டம் நடத்தியதால் திமுக எம்பி கனிமொழி உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 14 எம்பிக்கள் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இச்சூழலில், அதே கோரிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்றும் அமளியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முழுவதிலிருந்தும் 30 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதை தவிர்த்து மேலும் 3 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கல்யாண் பானர்ஜி, ராஜா, தயாநிதி மாறன், அபரூபா போடர், பிரசூன் பானர்ஜி, முகமது பஷீர், ஜி.செல்வம், சி.என். அண்ணாதுரை, ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, டாக்டர். டி. சுமதி, கே. நவாஸ்கனி, கலாநிதி வீராசாமி, என்.கே. பிரேமச்சந்திரன், சவுகதா ராய், சதாப்தி ராய், அசித் குமார் மால், கௌசலேந்திர குமார், ஆண்டோ ஆண்டனி, எஸ்.எஸ். பழனிமாணிக்கம், திருநாவுக்கரசர், பிரதிமா மோண்டல், ககோலி கோஷ் தஸ்திதார், கே. முரளீதரன், சுனில் குமார் மொண்டல், எஸ். ராமலிங்கம், கே.சுரேஷ், அமர்சிங், ராஜ்மோகன் உன்னிதன், கௌரவ் கோகோய், டி.ஆர். பாலு உள்ளிட்டவர்களை சஸ்பெண்ட் செய்வதற்காக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தீர்மானம் கொண்டு வந்தார்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதுவரை, மொத்தமாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த 46 எம்பிக்கள் மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய அமைச்சர் விளக்கம்:
தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "நான் உட்பட அனைத்து தலைவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களை மீண்டும் பதவியில் அமர்த்தவும், உள்துறை அமைச்சர் சபைக்கு வந்து விளக்கம் அளிக்கவும் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். தினமும் தொலைக்காட்சியில் அறிக்கை விடுகிறார். நாடாளுமன்ற பாதுகாப்புக்கு அரசு என்ன செய்கிறது என நாடாளுமன்றத்திலும் கொஞ்சம் பேசலாம். இன்றைய அரசு கொடுங்கோன்மையின் உச்சத்தை எட்டியுள்ளது. விவாதம் தேவை" என்றார்.
எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு விளக்கம் அளித்த மத்திய இணையமைச்சர் ஜி. கிஷண் ரெட்டி, "எதிர்க்கட்சியினர் இன்று அநாகரீகமாக நடந்து கொண்டனர். பிரதமர் மோடியின் அரசாங்கத்திற்கு எதிராக தங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லாததாலும், அவையை செயல்பட விடாததாலும் அவர்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள். எனவே, அவர்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்தார். அதை நாங்கள் ஆதரிக்கிறோம்" என்றார்.
நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம், மக்களவையை திருப்பிப்போட்ட நிலையில், மாநிலங்களவையிலும் எதிரொலித்தது. விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுப்பட்ட 46 மாநிலங்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் மட்டும் 78 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற வரலாற்றிலேயே நடைபெறாத அளவுக்கு மொத்தம் 92 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.