உறவினர்களை கவர போலீஸாக மாறிய 3 பேர்.. கைது செய்து அழைத்து சென்ற காவல்துறை!
பொதுவாக திருமணம், திருவிழா போன்ற உறவினர்கள், நண்பர்கள் கூடும் நிகழ்வில் பலரும் வித்யாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என முயற்சிப்பார்கள்

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமண வீட்டில் வித்தியாசமாக செல்ல நினைத்து காவல்துறை உடை அணிந்த 3 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக திருமணம், திருவிழா போன்ற உறவினர்கள், நண்பர்கள் கூடும் நிகழ்வில் பலரும் வித்யாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என முயற்சிப்பார்கள். இது சில நேரங்களில் மகிழ்ச்சியாகவும், சில நேரங்களில் சோதனையாகவும் முடியும். அப்படியான ஒரு சம்பவம் தான் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அதாவது உறவினர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து 3 பேர் போலீசில் வசமாக சிக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் என்ன நடந்தது எனப் பார்க்கலாம்.
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனைச் சேர்ந்தவர்களான ரவி பைர்வா, சுனில் தோமர் புது தில்லியைச் சேர்ந்த அபிஷேக் பைர்வா ஆகிய மூன்று பேரும் ராஜஸ்தானின் ஜலாவரில் ஒரு திருமணத்தில் கலந்துக் கொள்ள காரில் சென்றுள்ளனர். உறவினர்கள், நண்பர்கள் வருவார்கள் என்பதால் தங்களது கெத்தை காட்ட நினைத்து வித்யாசமாக செல்ல முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஆசை விபரீதத்தில் முடிந்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்பி அமித் குமார் கூறுகையில், “ராஜஸ்தான் மாநிலம் ஜெய்புரியா மில்லில் ஒரு போலீஸ் வாகனம் ரோந்து சென்று கொண்டிருந்தது. அப்போது போலீஸ் சைரன்கள் பொருத்தப்பட்ட காவல்துறைக்கு சம்பந்தம் இல்லாத ஒரு வெள்ளை நிற காரை போலீசார் பார்த்து சந்தேகித்துள்ளனர். உடனடியாக அந்த காரை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். ஆனால் மாநிலம் விட்டு மாநிலம் வந்துள்ள நிலையில் தங்களை போலீசாக நினைத்துக் கொண்ட அந்த 3 பேரும் போலீசாரை சமாளிக்கும் வகையில் பேசியுள்ளனர்.
அதாவது கார் ஓட்டுநர் ரவி, தன்னை மத்தியப் பிரதேச காவல்துறையின் போக்குவரத்துப் பொறுப்பாளர் என கூறியுள்ளார். மேலும் அவரது தோழர்களான அபிஷேக் மற்றும் சுனில் ஆகியோர் காவல்துறை அதிகாரிகள் என்றும் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் நடவடிக்கை சந்தேகப்படும்படியாக இருந்ததால் ராஜஸ்தான் போலீசார், காவல்துறை அடையாள அட்டை, தனிப்பட்ட வாகனத்தில் போலீஸ் சைரன் பொருத்தியதற்கான அனுமதிச் சீட்டையும் காட்டச் சொன்னார்கள். இதனால் தாங்கள் சிக்கிக்கொண்டதை உணர்ந்த 3 பேரும் பதில் அளிக்க முடியாமல் திணறினர். போலீசார் அவர்களிடம் பதில்களைக் கேட்டு அழுத்தம் கொடுத்த நிலையில் தாங்கள் திருமணத்திற்கு மாறு வேடத்தில் வந்ததை ஒப்புக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து 3 பேரும் தங்களை மன்னிக்குமாறு காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் செய்தது குற்றம் என்பதால் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுக்கொண்ட பின்பு எச்சரிக்கை செய்து விடுவித்தனர். எனினும் அவர்கள் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த காவல்துறை அதிகாரிகள் அதனை வழங்க மறுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















