Air India Express: மொத்தமாக திடீர் விடுப்பு எடுத்த ஊழியர்கள் - 25 பேரை வேலையை விட்டு நீக்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
Air India Express: திடீர் விடுப்பு எடுத்த ஊழியர்களில் 25 பேரை, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.
Air India Express: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், தனது ஊழியர்களில் சுமார் 25 பேரை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
25 பேர் பணிநீக்கம்:
இரண்டாவது நாளாக வேலைக்கு வராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விடுப்பு எடுத்த ஊழியர்களின் நடத்தை காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 70 விமானங்களின் சேவை நேற்று பாதிக்கப்பட்டது.
Around 25 employees (cabin crew members) of Air India Express Airlines have been terminated after they didn't report to work, and due to their behaviour, thousands of passengers suffered. The airline will be issuing a statement in the next 20 minutes: Airline Sources
— ANI (@ANI) May 9, 2024
300 பேர் திடீர் விடுப்பு:
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் கேபின் க்ரூ ஊழியர்கள் சுமார் 300 பேர், தீடிரென உடல்நலக்குறைவு என கூறி நேற்று விடுப்பு எடுத்தனர். அதோடு தங்களது ஃபோனையும் சுவிட்ச் ஆஃப் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் சுமார் 70 விமானங்களின் சேவைகள் நேற்று பாதிக்கப்பட்டது. இன்றும் சுமார் 76 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக 25 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் பணிநீக்கம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக இன்று கேபின் க்ரூ ஊழியர்களுடன் டவுன்ஹால் கூட்டத்தை நடத்த வாய்ப்புள்ளது. இதனிடையே, மே 13ம் தேதி வரையில் தங்களது தினசரி சேவையில் 40 விமான சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஊழியர்கள் போராட்டம்?
டாடா நிறுவனத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின், புதிய வேலைவாய்ப்பு விதிமுறைகளுக்கு எதிராக, ஊழியர்கள் திடீர் விடுப்பு எடுப்பது போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஊழியர்களை நடத்துவதில் சமத்துவம் இல்லை, மூத்த பதவிகளுக்கான நேர்காணலில் தேர்ச்சி பெற்ற போதிலும், சில ஊழியர்களுக்கு குறைந்தநிலையிலான வேலை வாய்ப்புகளே வழங்கப்பட்டுள்ளன என்பன போன்ற குற்றச்சாட்டுகளை ஊழியர்கள் முன்வைப்பதாக தெரிகிறது.
டாடா ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்:
மத்திய அரசிடம் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் கைப்பற்றியது. அதைதொடர்ந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயங்கி வரும் இந்த நிறுவனம் தினசரி 350 முதல் 400 விமான சேவைகளை வழங்கி வருகிறது. அதில், 250-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமான சேவைகளும், 120 சர்வதேச விமான சேவைகளும் அடங்கும். இந்நிலையில் நேற்று திடீரென 300 ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ததால், 90 விமான சேவைகளை சார்ந்த 13 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.