2023 Year Elections: நாடளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமா? - 2023ஆம் ஆண்டில் 10 மாநிலங்களில் பொதுத்தேர்தல்!
நடப்பாண்டில் மட்டும் 10 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது.
2024ம் ஆண்டு தேர்தலுக்காக பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பணிகளை தொடங்கியுள்ளன. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற பாஜகவும், இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இதனிடையே, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் வகையில், நடப்பாண்டில் மட்டும் 10 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. குறிப்பிட்ட தேர்தலில் கிடைக்கும் முடிவுகள் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மீதான, மற்ற மாநில மக்களின் பார்வையை மாற்றும் என்பதால், இந்த தேர்தல் முடிவுகள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல்:
நடப்பாண்டில் முதலில் நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களில் அடுத்து வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாத காலகட்டங்க்ளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அருகருகே உள்ள இந்த 3 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலமும் வரும் மார்ச் மாதம் முடிவடைய உள்ளதால், அங்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. திரிபுரா மாநிலத்தில் பாஜகவும், நாகாலாந்து மாநிலத்தில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியும், மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சியும் ஆட்சி செய்து வருகின்றன.
எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கர்நாடக தேர்தல்:
3 வடகிழக்கு மாநிலங்களை தொடர்ந்து, கர்நாடகாவில் வரும் ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாத தொடக்கத்திலோ நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநில சட்டசபை பதவிக்காலம் மே 24-ந் தேதி நிறைவடைகிறது. கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. பசவராஜ் பொம்மை முதலமைச்சராக உள்ளார். தென் இந்தியாவில் கூட்டணி இன்றி பாஜக நேரடியாக ஆட்சி செய்யும் ஒரே மாநிலம் என்பதால், கர்நாடக தேர்தல் முடிவுகள் அதிக எதிர்பார்புகளை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் கர்நாடகா சென்ற அமித் ஷா, அம்மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
5 மாநில தேர்தல்:
அதைதொடர்ந்து நடப்பாண்டின் பிற்பாதியில் மத்தியபிரதேசம், ராஜஸ்தான்,மிசோரம், சத்தீஷ்கார் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. இம்மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வெவ்வேறு தேதிகளில் முடிவடைகிறது. இருப்பினும் 5 மாநிலங்களிலும் தேர்தல் ஒன்றாகவே நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சத்தீஷ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியும், மத்தியபிரதேசத்தில் பாஜகவும், தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியும் மற்றும் மிசோரமில் மிசோ தேசிய முன்னணி கட்சியும் ஆட்சி செய்து வருகின்றன. இதில் மேலே குறிப்பிட்ட மாநிலங்களில் தெலங்கானாவில் ஆளும் கட்சிக்கும், பாஜகவிற்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு-காஷ்மீரில் தேர்தல்:
மேற்குறிப்பிட்ட 9 மாநிலங்களுடன் காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு அங்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. அதன்பிறகு தேர்தல் நடத்தப்படாமல் உள்ள சூழலில், கடந்த நவம்பர் 25ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து அங்கு நிலவும் பாதுகாப்பு நிலவரத்தை பொறுத்து, தேர்தல் தேதி முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த 10 சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகளும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முடிவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.