Omicron Confirmed In India | இந்தியாவில் இருவருக்கு உறுதியானது ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று
இந்தியாவில் இருவருக்கு உறுதியானது ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று என்பதை மத்திய சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது
இந்தியாவில், கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று என்பதை மத்திய சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா மரபியல் வேறுபாடுகளைக் கண்டறியும், இன்சாகாக் (INSACOG) நடத்திய மரபணு பகுப்பாய்வில் இந்த ஒமைக்ரான் தொற்று கண்டறியப்படுள்ளது.
மத்திய அரசு கடந்தாண்டு 2020 டிசம்பர் மாதம் 30ம் தேதி, மரபியல் வரிசை ஆய்வகங்களின் கூட்டமைப்பாக இன்சாகாக்- ஐ நிறுவியது. இன்சாகாக்-ன் கீழ் செயல்படும் ஆய்வகங்களில் செய்யப்பட்ட மாதிரிகளின் பகுப்பாய்வு மற்றும் வரிசைப்படுத்துதலின் அடிப்படையில் மரபணு குறியீட்டில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது வைரஸில் உள்ள பிறழ்வுகள் கண்டறியப்படுகின்றன. இந்தியாவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா தொற்றை இன்சாகாக் கூட்டமைப்பு தான் கண்டரிந்தது.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகதாராத் துறை கூடுதல் செயலாளர்," இந்தியாவில் இதுவரை மேற்கொண்ட மரபணு வரிசை பரிசோதனையில்,67% பாதிப்புகள் B.1.617.2 (டெல்டா) வகையைச் சார்ந்ததாக உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து, டெல்டா பிளஸ் மாறுபாடு என அழைக்கப்படும் (B.1.617.2) என்ற வகை தொற்றுப் பரவலில் ஆதிக்கம் செலுத்துகிறது. டெல்டா மாறுபாட்டை கூடுதல் பிறழ்வுடன் குறிக்கும் (B.1.617.3) வகை தொற்றுப் பரவல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று, கொரோனா வைரஸின் மற்றொரு மாறுபாட்டைக் குறிக்கும் கப்பா வைரசின் தொற்று பரவலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
கர்நாடகா விமான நிலையத்தில் 66 மற்றும் 46 வயதுமிக்க இரண்டு பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. முதன்மை மற்றும் இரண்டாம் நிலைத் தொடர்புடையவர்களிடம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
தடுப்பு நடவடிக்கைகள்:
முன்னதாக, ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக சர்வதேச பயணிகளுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது. அதன் படி, புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் படி அனைத்து பயணிகளும் (கொரோனா தடுப்பூசிகளை பெற்றிருந்தாலும்) 'அபாயத்தில் உள்ள நாடுகள்' என அடையாளம் காணப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் மேற்கொள்ளப்படும் கொவிட்-19 பரிசோதனைக்கு கூடுதலாக விமான நிலையத்தில் வருகைக்கு பிந்தைய கொவிட்-19 சோதனையை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும்.
இந்த, சோதனையில் தொற்று கண்டறியப்பட்ட பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ மேலாண்மை நெறிமுறையின்படி சிகிச்சை அளிக்கப்படுவார்கள். மேலும், அவர்களின் மாதிரிகள் முழு மரபணு வரிசைப்படுத்தலுக்கு (ஜீனோம் சீக்வென்சிங்க்) எடுக்கப்படும்.
தொற்று பாதிப்பில்லாத பயணிகள் விமான நிலையத்திலிருந்து புறப்படலாம். ஆனால், 7 நாட்களுக்கு வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து, இந்தியா வந்த 8-வது நாளில் மீண்டும் பரிசோதனை செய்துக்கொள்வதோடு, அதற்கடுத்த 7 நாட்கள் சுய கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
மேலும், ஓமிக்ரான் வகை பாதிப்புகள் கண்டறியப்படும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்படும் தகவல்களை கருத்தில் கொண்டு, 'ஆபத்து பிரிவில்' இல்லாத நாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 5% பேர் விமான நிலையங்களில் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )