Wrestlers Protest: மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்: 1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற வீரர்கள் ஆதரவு
மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்துக்கு 1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்துக்கு 1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜிபூஷன் சிங் சரண் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி ஒரு மாதத்திற்கும் மேலாக மல்யுத்த வீராங்கனைகள் போராடி வருகின்றனர். ஷாக்ஷி மாலிக், வினேஷ் போகத் ஆகிய வீராங்கனைகளுக்கு பஜ்ரங் புனியா என்ற வீரர் துணையாக களத்தில் போராடி வருகிறார்.
மல்யுத்த வீரர்களுக்கு குவியும் ஆதரவு
பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷண் சிங்கை உடனடியாக கைது செய்ய வேண்டும் என விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் களத்தில் குதித்தனர். போராட்டத்திற்கு ஆதரவாக ஜந்தர் மந்தரை நோக்கி விவசாயிகள் பேரணியாக சென்றனர். இதையடுத்து, மல்யுத்த வீராங்கனைகளுக்கு முக்கிய சீக்கிய அமைப்பு தெரிவித்தது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக சிரோமணி குருத்வாரா நிர்வாகக் குழு அறிவித்தது.
இந்த நிலையில், மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்துக்கு 1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்த அணி உறுப்பினர் மதன் லால், ''நாட்டுக்காக உழைத்துத் தாங்கள் பெற்ற பதக்கங்களை வீசி எறிய வீராங்கனைகள் முடிவு செய்தது துயரம் மிக்கது. இதனால் மிகுந்த வேதனைக்கு ஆளாகிறோம். அரசு இந்த விவகாரம் குறித்துப் பேசி விரைவில் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
வீராங்கனைகளின் போராட்டம் குறித்து அறிக்கை ஒன்றையும் 1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வெளியிட்டுள்ளது. அதில், ’’நம்முடைய மல்யுத்த வீரர்கள் கையாளப்படுவது குறித்த வழக்கத்துக்கு மாறான காட்சிகள், எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளன. கங்கை நதியில் அவர்கள் கஷ்டப்பட்டுப் பெற்ற பதக்கங்களை எறிவது குறித்த அவர்களின் யோசனை குறித்து மிகவும் கவலை கொள்கிறோம்.
அந்தப் பதக்கங்கள் அனைத்தும் வீரர்களின் ஆண்டுக்கணக்கான உழைப்பு, தியாகம், விடாமுயற்சி மற்றும் மன உறுதி ஆகியவற்றால் விளைந்தவை. அவை வீரர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. நாட்டின் பெருமை மற்றும் மகிழ்ச்சியே அந்த பதக்கங்கள். இந்த விவகாரத்தில் வீரர்கள் எந்தவிதமான அவசரமான முடிவையும் எடுத்துவிடக் கூடாது என்று வலியுறுத்துகிறோம். அவர்களின் குறைகள் காதுகொடுத்து கேட்கப்பட்டு, விரைவில் சரிசெய்யப்படும் என்று நம்புகிறோம். நம்முடைய சட்டம் வெல்லட்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டம்; பின்னணி என்ன?
கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறினர். இதனையடுத்து குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டது.
விசாரணையின் அடிப்படையில் அவர்கள் ஏப்ரல் மாத தொடக்கத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்நிலையில் அந்த அறிக்கையின் விவரத்தையும் கூறவில்லை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி ஏப்ரல் 23 ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தின் போது அவர்கள் டெல்லி கனோட் ப்ளேஸ் காவல் நிலையத்தில் பிரிஜ் பூஷண் சிங் மீது புதிதாக புகார் கொடுத்தனர். ஒரு சிறுமி உள்பட மூன்று வீராங்கனைகள் பாலியல் புகார் கொடுத்தனர்.
அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் எஃப்ஐஆர் பதிவு செய்ய வலியுறுத்துமாறு உச்ச நீதிமன்றத்தை நாடினர். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் பிரிஜி பூஷண் மீது போக்ஸோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் அவர் கைது செய்யப்படவில்லை. இதனால் வீராங்கனைகள் போராட்டத்தைத் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.