குடியரசு தலைவர் தேர்தல்...பாஜகவுக்கு எதிராக ஒன்று சேரும் 17 அரசியல் கட்சிகள்...வேட்பாளர் யார்?
வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சியினரை ஒன்றிணைக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம், குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சியினரின் வியூகம் குறித்து விவாதிக்க மம்தா பானர்ஜி நேற்று ஆலோசனை கூட்டம் கூட்டினார். வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சியினரை ஒன்றிணைக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி (டிஆர்எஸ்) தலைவரும் தெலங்கானா முதலமைச்சருமான சந்திர சேகர் ராவ், இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தார். இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சிக்கு அழைப்புவிடுக்கப்பட்டதற்கு அவர் கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தார். அதேபோல, இந்த கூட்டத்தை ஆம் ஆத்மி கட்சி புறக்கணிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இவ்விரண்டு கட்சிகள் மட்டும் இன்றி, மேலும் மூன்று முக்கிய அரசியல் கட்சிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. எந்த வித முன் அறிவிப்பும் இன்றி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மம்தா மீது அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தின் ஒரே நோக்கம் குடியரசு தலைவர் தேர்தல் என கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் கூறினர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, "நாட்டில் நடைபெற்று வரும் புல்டவுசர் சம்பவங்கள் குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்" என்றார். மொத்தமாக 22 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 17 அரசியல் கட்சிகளின் பிரிதிநிதிகள் மட்டுமே இதில் பங்கேற்றன. ஜூன் 21ஆம் தேதிக்குள், குடியரசு தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதில் ஒரு மித்த கருத்தை எட்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா ஆகியோர் மற்ற அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
முன்னதாக, எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளராக சரத் பவாரை அறிவிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதை அவர் மறுத்துவிட்டார். இறுதியாக, மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபால் காந்தி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபருக் அப்துல்லா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
இதுகுறித்து சரத் பவார் தனது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில், இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக எனது பெயரைப் பரிந்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன். எனினும் எனது வேட்புமனுவின் முன்மொழிவை நான் பணிவுடன் நிராகரித்து விட்டேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
கூட்டத்தை புறக்கணித்திருப்பது குறித்து விளக்கம் அளித்துள்ள டிஆர்எஸ், "காங்கிரஸ் கட்சியுடன் மேடையை பகிர்ந்து கொள்வதற்கான கேள்விக்கே இடம் இல்லை" என கூறியுள்ளது. ஆட்சேபனை தெரிவித்த பிறகும் காங்கிரஸ் கட்சி அழைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள டிஆர்எஸ், "சமீபத்தில் தெலங்கானாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, பாஜகவை விமர்சிக்காமல் டிஆர்எஸ் அரசை குறிவைத்து பேசினார். குறிப்பாக, சமீபத்தில் தெலங்கானாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜகவுடன் காங்கிரஸ் கூட்டு சேர்ந்துள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே வேட்பாளரை தேர்வு செய்து, வேட்பாளரின் கருத்து கேட்கப்பட்டு, கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஏன் இப்படி செய்யப்பட்டது? கூட்டங்களை நடத்தி, ஒருமித்த கருத்துக்கு வந்து, வேட்பாளரின் ஒப்புதலைப் பெற்று, கூட்டத்திற்குப் பிறகு பெயரை அறிவிப்பதே சரியான நடைமுறையாக இருந்திருக்கும்" என டிஆர்எஸ் சாடியுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்றும், முடிவுகள் ஜூலை 21-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தை புறக்கணித்துள்ள ஆம் ஆத்மி, "குடியரசு தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகே, இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும்" என தெரிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் மம்தாவுக்கு எதிரிகளாக கருதப்படும் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டன.