பெங்களூரு ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு.. இனி 10 மணி நேரம் வேலை.. செத்தாங்க
தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வேலை நேரத்தை தற்போதுள்ள 9 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த அரசு பரீசிலித்து வருகிறது. இதனால், பெங்களூருவில் ஐடி ஊழியர்கள் பாதிக்கப்பட உள்ளனர்.

ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 9 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த கர்நாடக அரசு திட்டமிட்டு வருகிறது. இது, நவீன அடிமைத்தனம் எனக் கூறி ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பெங்களூரு ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு:
கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம், 1961இல் திருத்தம் மேற்கொள்ள கர்நாடக காங்கிரஸ் அரசு திட்டமிட்டு வருகிறது. அதன் வழியாக, ஐடி, பிபிஓ துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் வேலை நேரத்தை தற்போதுள்ள 9 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த பரீசிலித்து வருகிறது.
கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம், 1961 இல் 10 மணிநேர வேலை நேரத்தை நிர்ணயிப்பதற்கான திருத்தம் கொண்டுவருவதற்கான திட்டம் உள்ளதால், தொழில்துறை செயலாளர் ரோகிணி சிந்துரி தலைமையிலான மாநில தொழிலாளர் துறை அதிகாரிகள் பல்வேறு தொழிலாளர் அமைப்புகளுடன் கலந்துரையாடினர். கூடுதல் நேரத்தை (OT) ஒரு நாளைக்கு அதிகபட்சம் 10 மணிநேரத்திலிருந்து 12 மணிநேரமாக அதிகரிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.
இனி 10 மணி நேரம் வேலை:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சிலிகான் வேலியில்தான் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், ஐடி நிறுவனங்களின் தலைமையங்கள் உள்ளன. அதன் கிளைகள், பெங்களூருவில் அமைந்துள்ளன. இதன் காரணமாக, இந்தியாவின் சிலிகான் வேலி என பெங்களூரு அழைக்கப்படுகிறது.
இந்த நிலையில், பெங்களூருவின் வளர்ச்சிக்கு மட்டும் இன்றி கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றி வரும் ஐடி ஊழியர்களின் வேலை நேரத்தை உயர்த்த அம்மாநில அரசு திட்டமிட்டிருப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
செத்தாங்க!
கர்நாடக மாநில ஐடி/ஐடிஇஎஸ் ஊழியர் சங்கத்தின் (KITU) பொதுச் செயலாளர் சுஹாஸ் அடிகா, இதுகுறித்து பேசுகையில், "2024 ஆம் ஆண்டுக்கான நல்வாழ்வு அறிக்கையின்படி, இந்தியாவில் 25 வயதுக்குட்பட்ட 90 சதவீத ஊழியர்கள் பதட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பணி அழுத்தம் காரணமாக, ஊழியர்களின் தற்கொலைகளும் இறப்புகளும் பதிவாகியுள்ளன.
முன்மொழியப்பட்ட சட்ட திருத்தம், தொழிலாளர்களை கர்நாடக அரசாங்கம் மனிதர்களாக கருத விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது. அவர்களுக்கு என தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கை தேவைப்படுகிறது. மாறாக, அது சேவை செய்யும் நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்க அவர்களை இயந்திரங்களாக மட்டுமே பார்க்கிறது" என்றார்.





















