முழு ஊரடங்கு என பரவும் தகவல் வதந்தியே - சுகாதாரத்துறை
தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்தவுடன் முழு ஊரடங்கு என பரவி வரும் தகவல் வதந்தியே என்று தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தேர்தல் காரணமாக எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், தேர்தல் முடிந்தவுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று வதந்தி பரவியது.
தற்போது, இதுதொடர்பாக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், ‘தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்தவுடன் முழு ஊரடங்கு என பரவி வரும் தகவல் வதந்தியே. சமூகவலைதளங்களில் பரவி வரும் தகவல் பொய்யானது. அத்தியாவசியமற்ற பணிகளுக்கு மட்டும் சில கட்டுப்பாடு விதிக்கப்படலாம்’ என கூறியுள்ளது.
இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.