ஒழுக்கமா இருக்கணும் நல்லா படிக்கணும்; மாணவிகளுக்கு சௌமியா அன்புமணி பாசத்துடன் அறிவுரை
பருவநிலை மாற்றத்தால் உலகில் காலநிலை அகதிகள் அதிகரித்து வருவதாக நல்லம்பள்ளியில் நடந்த கருத்தரங்கில் சௌமியா அன்புமணி ஆதங்கம்.
தருமபுரியில் இன்று(31-ம் தேதி) ஸ்ரீவிஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்கள், தருமபுரி சுழற்சங்கம்(எலைட்) இணைந்து பருவநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தியது. இக்கருத்தரங்கில், சிறப்பு விருந்தினராக பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
சௌமியா அன்புமணி கருத்தரங்கில் கல்லூரி மாணவிகளிடையே பேசியதாவது:
பருவநிலை மாற்றம் காரணமாக 200 ஆண்டுகளாக பூமி வெப்பமடைந்து வருகிறது. இதனால் பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு மனித இனம் பாதிப்புக்கு உள்ளாகிறது. பருவ மழை ஆண்டுதோறும் பருவம் தவறி பொழிகிறது.
பருவநிலை மாறி பெய்யும் மழை
ஒரு மாத அளவில் பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாளிலேயே பெய்து விடுகிறது. இதனால், தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் கடலுக்கு வீணாக செல்கிறது. இதன் காரணமாக விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது.
மேலும், உலகில் பருவநிலை மாற்றம் காரணமாக பல்வேறு பகுதிகளில் ஏற்படும் வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட காரணிகளால் காலநிலை அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி பூமி அதிக அளவு வெப்பநிலையை சந்தித்துள்ளது. இந்த சூழலில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பருவநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வை பெற வேண்டும். மரங்களை நடுதல், மறுசுழற்சியை பின்பற்றுதல், நெகிழி பயன்பாட்டை குறைத்தல் உள்ளிட்டவைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பொருட்கள் என்ற நிலை நம் இந்திய கலாச்சாரத்தில் இல்லை. ஆனால், தற்போது ஒருமுறை மட்டும் பயன்படுத்தி வீசப்படும் பொருட்களால் உலகமே குப்பைக் காடாக மாறி வருகிறது.
பழங்காலத்தில் முன்னோர்கள் ஏரிக்கிழங்கு பாதுகாப்பு வைத்திருந்தனர்
பழங்காலத்தில் நம் முன்னோர்கள் ஏரி, குளங்கள், ஆற்றுப்பகுதிகளை தூர் வாரி முறையாக பராமரித்து வந்தனர். ஆனால், தற்போது இந்த நடைமுறைகளை சரிவர கடைபிடிப்பதில்லை. கடந்த 1800-ம் ஆண்டுக்கு முன்புவரை உலகில் புவி வெப்பமயமாதல் என்ற நிகழ்வு நடைபெறவில்லை. தொழிற்புரட்சி காரணமாக தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு பொருளாதார வளர்ச்சி ஏற்றம் காணும் நிலையில் தொழிற்சாலைகளின் இயக்கம் காரணமாக புவிவெப்பமாதல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. 1.2 செல்சியஸ் டிகிரி வரை புவி கூடுதலாக வெப்பம் அடைந்துள்ளது. பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த தவறினால், இதுவரை நாம் பார்த்த நோய்களை விட கடும் நோய்கள் மனித குலத்தை அச்சுறுத்தும். இதற்கெல்லாம் மரங்கள் மட்டுமே தீர்வு.
பசுமையை பாதுகாக்க வேண்டும்
பசுமைப் பரப்பு சுருங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சத்தியமங்கலம், ஒகேனக்கல் காடுகள் வீரப்பன் மறைவிற்கு பின் சுருங்கி வருவது வேதனைக்குரியது. அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் பூமியை பாழ்படுத்தாமல் தரவேண்டும் என ஒவ்வொருவரும் கருத வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினர் தயக்கமும், வெட்கமும் இன்றி நம் முன்னோர்களைப் போலவே மஞ்சள் பை பயன்பாட்டை கடைபிடிக்க முன்வர வேண்டும். இவ்வாறு பேசினார்.
பருவநிலை மாற்றத்தால் புவி எப்பமாவது தொடர்பான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில், பருவநிலை மாற்றம் புவி வெப்பமயமாதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக, தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் பருவநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு பேரணியை சவுமியா அன்புமணி தொடங்கி வைத்தார்.