Mettur Dam : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! காவிரி ஆற்றில் வெள்ளம்
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 18,000 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் வழியாக 500 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது

சேலம் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 18,610 கன அடியில் இருந்து 28,784 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முந்தினம் காலையில் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 17,880 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 18,610 கனஅடியாக அதிகரித்தது.
இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 18,610 கன அடியில் இருந்து 28,784 கன அடியாக அதிகரித்துள்ளது. மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 119.64 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து மொத்தமாக 22,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் காவிரி டெல்டா பாசனத்திற்காக 18,000 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் வழியாக 500 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது அணையின் நீர் இருப்பு 92.899 டிஎம்சியாக உள்ளது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளின் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அளவு அதிகரிப்பதும், குறைப்பதுமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.
பின்னர் அவர்கள் தொங்கு பாலத்தின் நின்றவாறு காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ரசித்து பார்த்தனர். மெயின் அருவியில் ஆனந்தமாக அவர்கள் குளித்து மகிழ்ந்தனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.





















