காவிரி உபரி நீர்த்திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் - ஜி.கே.மணி
ஒகேனக்கல் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, விரைவில் பாமக சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி தருமபுரியில் பேட்டி.
![காவிரி உபரி நீர்த்திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் - ஜி.கே.மணி GK Mani says Cauvery Surplus Water Project is not implemented we will stage a massive protest - TNN காவிரி உபரி நீர்த்திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் - ஜி.கே.மணி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/07/750dc20a1e6cac4456195d4bb48d32821722995330045113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஒகேனக்கல் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, விரைவில் பாமக சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்பட உள்ளோம் என பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி கூறியுள்ளார்.
பாமகவின் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் ஆலோசனை கூட்டம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.மணி, “காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால், காவிரி ஆற்றில் கடந்த 15 நாட்களாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேட்டூரில் இருந்து, டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் செல்கிறது. ஆனால் தமிழகத்தில் காவிரி நதிநீர் பாயும் இடம் தருமபுரி மாவட்டம், வறட்சியாக இருந்து வருகிறது.
அதனை போக்கும் வகையில் காவிரி உபரி நீர் திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பாமக சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
காவிரி உபரி நீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த ராமதாஸ் மாபெரும் கையெழுத்து இயக்கம்
ஒகேனக்கல் காவிரி ஆறு உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் அனைத்து கட்சியினர் இணைந்து மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தி சுமார் பத்து லட்சத்துக்கு மேற்பட்ட நபர்களிடம் கையெழுத்து பெற்று, அப்போதைய முதலமைச்சரிடம் கொடுத்தோம். திட்டத்தை நிறைவேற்றி தருவதாக சொன்னார். தற்போதைய முதல்வரிடமும் வலியுறுத்தினோம்.
வீணாக கடலில் கலக்கும் தண்ணீர்
ஒகேனக்கல் காவிரியில் தற்பொழுது ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கால் சுமார் 60 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்திருக்கிறது. இதில் இரண்டரை டிஎம்சி தண்ணீரை மட்டும் தருமபுரி மாவட்டத்திற்கு வழங்க வேண்டும். மத்திய அரசு காவிரி நீர் பிரச்சனைகள் குறித்து உடனடி கவனம் செலுத்தி, ஒரு வலுவான காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும். ராசி மணல் அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்
மேலும் ஒகேனக்கல் பிலிகுண்டுலு பகுதியில் கடந்த 1961 ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சி காலத்தில் ஆய்வு செய்து அடிக்கல் நாட்டப்பட்ட ராசி மணல் அணைக்கட்டு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 75 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க இயலும்.
இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் வரை பயன்படுத்தலாம். இதனால் மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரம் கிடைக்கும். ஒகேனக்கல் காவிரி உபரி நீர் திட்டம், மற்றும் ராசி மணல் அணைக்கட்டு திட்டம் ஆகியவற்றின் மூலம் சுமார் 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இந்த திட்டச்களை நிறைவேற்ற வலியுறுத்தி, சட்ட மன்றத்தில் பேசப் போகிறோம்” என்றார்.
இந்த கூட்டத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ இல.வேலுச்சாமி உள்ளிட்ட பாமக தமிழ்நாடு உழவர் பேரியக்க நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)