தருமபுரி: சட்ட விரோதமாக கருவின் பாலினத்தை தெரிவித்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது
பென்னாகரம் அருகே சட்ட விரோதமாக கருவின் பாலினம் குறித்து கண்டறிந்து தெரிவித்த கும்பலை சேர்ந்த இருவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் பாய்ந்தது- ஆட்சியர் கி.சாந்தி நடவடிக்கை.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே நெக்குந்தி முத்தப்பா நகரில் உள்ள ஒரு வீட்டில் சட்ட விரோதமாக கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து ஸ்கேனிங் மூலம் தகவல் தெரிவிப்பதாக கடந்த மாதம் 27-ம் தேதி மாவட்ட மருத்துவர் இணை இயக்குனர் சாந்திக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற, மருத்துவ குழுவினர் காவல் துறையினரின் உதவியுடன் சட்ட விரோதமாக பரிசோதனை மேற்கொண்ட கும்பலை சுற்றி வளைத்தனர்.
இதில் கர்ப்பிணி பெண்களிடம் 13,500 பணம் வசூல் செய்து, சட்ட விரோதமாக கருவின் பாலினம் கண்டறிந்து தெரிவித்துள்ளனர். இந்த கும்பலை, தருமபுரி மாவட்ட ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர், மருத்துவர்.சாந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் பிடித்தனர்.
இதில் இண்டூர் அடுத்த நத்ததள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமையலராக பணியாற்றி வரும் லலிதா என்பவர் இடைத்தரகராக செயல்பட்டு கர்ப்பிணி பெண்களை அழைத்து வந்து, கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன் என்பவர் முறையான மருத்துவம் படிக்காமல் நடமாடும் ஸ்கேன் இயந்திரம் மூலம், ஆளில்லா வீட்டில் வைத்து பெண்களுக்கு கருவின் பாலினம் கண்டறிந்து தெரிவித்தது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இடைத்தரகர் லலிதா, ஸ்கேன் செய்து கருவின் பாலினம் தெரிவித்த முருகேசன் மற்றும் நடராஜன், சின்னராஜ் ஆகிய நான்கு பேரையும் பிடித்தனர்.
தொடர்ந்து அவர்களிடமிருந்து பணம், சொகுசு கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, காவல் துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் கனிமொழி அளித்த புகாரின் பெயரில் பென்னாகரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து நால்வரையும் சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் இதுபோன்ற சட்ட விரோதமாக கருவின் பாலினம் கண்டறிந்து சொல்லுதல், கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபடுதல் போன்றவற்றை தடுப்பதற்காக, இந்த கும்பலை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம் மாவட்ட ஆட்சியருக்கு கி.சாந்திக்கு பரிந்துரை செய்தார்கள். இதனைத் தொடர்ந்து சட்ட விரோதமாக கருவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்து வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன், சின்னராஜ் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி உத்தரவிட்டார்.
இதனௌ தொடர்ந்து காவல் துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, சேலம் மத்திய சிறையில் உள்ள முருகேசன், சின்னராஜ் ஆகிய இருவரையும் மீண்டும் காவல் துறையினர் கைது செய்தனர்.