'என்ன ஒண்ணுமே பண்ண முடியாதுன்னு சொன்ன கான்ட்ராக்டர்'- அப்புறம் நடந்தது என்ன?
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரமற்ற தார் சாலை, மழை பெய்தால் சாலை பெயர்ந்துவிடும் என வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கூத்தாபடி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மாபள்ளம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் நீண்ட நாட்களாக சாலை வசதி இல்லாததால், மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மனுக்களை கொடுத்து, தார் சாலை அமைத்து தர வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து கூத்தபாடி மண்டுவில் இருந்து அம்மாபள்ளம் வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன் ஒப்பந்தம் விடப்பட்டது.
தொடர்ந்து சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த சாலை அமைப்பதற்கு அதே கிராமத்தில் உள்ள ஏரியிலிருந்து மண் எடுத்து வந்துள்ளனர். ஆனால் சாலை மண்சாலை பணிகள் முடிந்தவுடன் அதனை சுத்தம் செய்யாமல் அதன் மீது தார் சாலையும் அமைத்துள்ளனர்.
இதனால் தார் சாலை தரம் இல்லாமல் போடப்பட்டுள்ளது. ஒரு மழை வந்தால் கூட காணாமல் போய்விடும் என்ற நிலையில் இருந்து வருகிறது. தார்சாலை தரம் இல்லாமல் இருப்பதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து ஒப்பந்ததாரர்களிடம் முறையிட்டுள்ளனர்.
நீண்ட நாட்களாக சாலை வசதி இல்லாமல் இருந்த தங்களுக்கு இப்பொழுது தான் தார் சாலை வசதி கிடைத்துள்ளது அதனை தரமாக போட்டுக் கொடுக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் தரம் இல்லாமல் அமைத்தால், ஒரு மழை வந்தாலே சாலையில் உள்ள தார் முழுவதும் பெயர்ந்து வந்துவிடும் என முறையிட்டுள்ளனர். ஆனால் ஒப்பந்ததாரர் சத்தியமூர்த்தி என்பவர் சாலை தரமாகத்தான் அமைக்கப்பட்டுள்ளது.
தார்சலை பணிகளை மாவட்ட ஆட்சியர் கூடுதல் ஆட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர் என அனைத்து அதிகாரிகளும் நேரில் வந்து ஆய்வு செய்து விட்டனர். சாலை மீது எந்த குறையும் சொல்லவில்லை. இதற்கு மேல் யாரும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும், நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என ஒருமையில் பேசி நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் புகார் சொல்லிக் கொள்ளுங்கள் என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே கூத்தப்பாடி மண்டு முதல் அம்மாபாளையம் வரை அமைக்கப்பட்டுள்ள இந்த தார் சாலை தரமற்ற முறையில் இருப்பதால், அரசு அதிகாரிகள் இந்த சாலையை நேரில் வந்து ஆய்வு செய்து தரமான சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் கலைந்து சென்றனர்.