அரூர் சந்தையில் பக்ரீத்தை ஒட்டி ரூ.50 லட்சத்திற்கு மட்டுமே ஆடுகள் விற்பனை; ஏமாற்றுத்துடன் சென்ற விவசாயிகள்
அரூர் அடுத்த வார சந்தையில் மழை எதிரொலியால் கால்நடைகள் வரத்து குறைவு. பக்ரீத் பண்டிகையை ஒட்டி மூன்று கோடி ரூபாய் வரை விற்பனையாகும் நிலையில் இன்று ரூ.50 லட்சத்திற்கு விற்பனையானது.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் புதன்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த வார சந்தைக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், மற்றும் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் இருந்து கால்நடைகளை வாங்கவும் விற்கவும் விவசாயிகளும் வியாபாரிகளும் வந்து செல்கின்றனர்.
வாரந்தோறும் இந்த சந்தையில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் ஒரு கோடி வரை விற்பனையாகும். அதேபோல் பொங்கல் தீபாவளி, ஆடி, ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் ரூ.3 கோடி முதல் 5 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். கோபிநாதம்பட்டி கூட்ரோடு வார சந்தையிலிருந்து அதிகப்படியான மாடுகள் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கால்நடை வரத்து அதிகரித்து விற்பனை விலை குறைவாக இருந்து வந்தது. இந்நிலையில் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் கோடை மழை பெய்து வருவதால் வார சந்தைக்கு கால்நடைகள் விற்பனைக்கு வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் வருகிற 17-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட நிலையில் இன்று நடைபெற்ற வார சந்தைக்கு இறைசிக்காக கால்நடைகளை வாங்குவதற்கு ஏராளமான வியாபாரிகளும் பொதுமக்களும் வந்திருந்தனர்.
ஆனால் கோடை மழை தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருவதால் கால்நடைகளுக்கான தீவனத் தட்டுப்பாடு முற்றிலுமாக குறைந்துள்ளது. இதனால் வாரச் சந்தைக்கு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு வரத்து குறைந்துள்ளது.
எப்பொழுதும் ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைகளுக்கு முன்பாக நடைபெறும் வார சந்தைகளில் கால்நடைகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு வரத்து அதிகரிக்கும். ஆனால் இன்றைய வார சந்தைக்கு 1000க்கும் குறைவான ஆடுகளும், மாடுகளும் விற்பனைக்கு வந்திருந்தன. ஆடு, மாடு வரத்து குறைவாக இருந்ததால் விலை உயர்ந்து விற்பனையானது. பத்து கிலோ எடை கொண்ட ஆடு 9000 முதல் 12 ஆயிரம் வரை விற்பனையானது.
அதிகபட்சமாக ஒரு ஆட்டின் விலை 37 ஆயிரம் வரை விற்பனையானது. மேலும் பக்ரீத் பண்டிகை என்பதால் எழுச்சிக்காக ஆடுகளை வாங்க இஸ்லாமியர்கள் அதிகமாக வரக்கூடும் என்பதற்காக செம்மறி ஆடுகள் வரத்து அதிகமாக இருந்தது. இதில் அதிகபட்சமாக ஒரு ஆட்டின் விலை ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது. மேலும் தொடர் மழை எதிரொலியால் கால்நடைகள் வரத்து குறைவாக இருந்ததால் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
அதேபோல் பக்ரீத், ரம்ஜான் போன்ற பண்டிகைக்கு முன்பு மூன்று கோடி வரை வர்த்தகம் நடைபெற்று வந்த நிலையில் இன்றைய வார சந்தையில் சாதாரண நாட்களைப் போலவே ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் ரூ.50 லட்சத்திற்கு விற்பனையானது. மேலும் விலை வரத்து குறைவாகவும் விலை அதிகரித்தும் விற்பனையானதால் ஆடுகள் விற்க முடியாமல் விவசாயிகள் வாங்க முடியாமல் பொதுமக்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.