தருமபுரி அருகே லாரி மோதி அடையாளம் தெரியாத வடமாநில தொழிலாளிகள் 2 பேர் உயிரிழப்பு
தருமபுரி அருகே லாரி மோதி அடையாளம் தெரியாத 2 வடமாநில இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு-காவல் துறை விசாரணை.
கர்நாடக மாநிம பெங்களூரில் இருந்து கேரளாவிற்கு ஈச்சர் வாகனத்தில் வீட்டு சாமான்களை ஏற்றிக் கொண்டு ஓட்டுநர் முரளி என்பவர் ஓட்டி வந்துள்ளார். மேலும், வீட்டு சாமான்களை இறக்குவதற்காக, லாரியில் பொருட்களை ஏற்றிவிட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த பேக்கேஜ்யாளர்கள் லாரியில் வந்துள்ளனர்.
இந்நிலையில் பெங்களூரிலிருந்து கேரளா நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரி அருகே வந்தபோது, தருமபுரி- பென்னாகரம் சாலை மேம்பாலத்தில் இன்று விடியற்காலை, தேசிய நெடுஞ்சாலையில் கறி கோழி ஏற்றிச் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஈச்சர் வாகனம், கறி கோழி ஏற்றி வந்த லாரியின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ஈச்சர் வாகன ஓட்டுனர் முரளி, உடனே ஈச்சர் வாகனத்தை தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக நிறுத்தியுள்ளார். தொடர்ந்து ஈச்சர் வாகனத்தில் இருந்த வீட்டு சாமான்களை, லாரி ஓட்டுநர் போட்டோ எடுக்க சொல்லியுள்ளார். இதனால் வட மாநில பேக்கேஜ்மேன்கள் இருவரும் கீழே இறங்கி வாகனத்தை போட்டோ எடுத்துள்ளனர். அப்போது வட மாநிலத்தவர் இருவரும் கீழே இறங்கி வாகனத்தை போட்டோ எடுத்துக் கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மற்றொரு லாரி எதிர்பாராத விதமாக இருவர் மீதும் மோதி, பின்னர் சாலை ஓரத்தில் நின்றிருந்த ஈச்சர் வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இரு வட மாநில பேக்கேஜ் மேன்கள் இருவரும், லாரிகளுக்கு நடுவில் சிக்கி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தருமபுரி நகர காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று 2 உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து காவல் துறையினர், லாரி ஓட்டுநர் முரளியிடம் விசாரணை நடத்தினர். ஆனால் வீட்டு சாமான்கள் ஏற்றி, இறக்கு கூலி வேலைக்கு வந்தவர்கள் என்பதால், வட மாநிலத்தை சேர்ந்த இருவரின் பெயர், விவரம் தெரியவில்லை என தெரிவித்துள்ளார். இதனால் இறந்தவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என அடையாளம் தெரியாததால், காவல் துறையினரால், அவர்களது உறவினருக்கு தகவல் தெரிவிக்க முடியவில்லை. மேலும் வீட்டு சாமான்கள் ஏற்றிவிட்டவரின் தொடர்பு எண் கிடைத்தால் மட்டுமே, இறந்தவர்களின் விவரம் தெரியும். இதனால் இறந்தவர்களின் விபரத்தினை கண்டறிய காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கூலி வேலைக்கு வந்த வட மாநில இளைஞர்கள் இருவர், விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.