சட்டவிரோதமாக கருவின் பாலினத்தை இடைத்தரகராக செயல்பட்ட சமையலர் லலிதாவை சஸ்பென்ட் செய்த மாவட்ட ஆட்சியர்
தருமபுரி அருகே சட்டவிரோதமாக கருவின் பாலினம் கண்டறியும் கும்பலுக்கு, கர்ப்பிணிகளை அழைத்துவரும் இடைத்தரகராக இருந்த அரசுப்பள்ளி சமையலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் கி.சாந்தி நடவடிக்கை.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நெற்குந்தி காந்தி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், முறையாக மருத்துவம் படிக்காமல், ஸ்கேன் இயந்திரம் வைத்து, சட்ட விரோதமாக கர்ப்பிணி பெண்களின் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து சொல்வதாக சுகாதாரத்துறையின் இருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் சாந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர், ஐந்து கர்ப்பிணி பெண்களை வைத்து வீட்டில் நடமாடும் ஸ்கேன் இயந்திரம் மூலம் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்து சொல்லும் கும்பலை கையும் களவுமாக பிடித்தனர்.
இதில் கர்ப்பிணி பெண்களிடம் 13,500 ரூபாய் பெற்றுக் கொண்டு, கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன் என்பவர் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்து வந்துள்ளார்.
மேலும் சிசுவின் பாலினம் கண்டறிய கர்பிணி பெண்களை அழைத்து வந்த, நடப்பனள்ளி அரசு நடுநிலைப் பள்ளி சத்துணவு சமையலர் லலிதா, மற்றும் நடராஜன், ஓட்டுநர் சின்ராஜ் உள்ளிட்ட கும்பலை பிடித்து அவர்களிடமிருந்து பணம், நடமாடும் ஸ்கேன் இயந்திரம், சொகுசு கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, பென்னாகரம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து பென்னாகரம் காவல் துறையினர் நான்கு பேரையும் கைது செய்தனர். இதில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, இதே குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, இனிமேல் இதுபோன்ற சட்டவிரோத செயலில் ஈடுபடமாட்டேன் என நீதிமன்றத்தில் உத்தரவாதம் எழுதிக் கொடுத்துவிட்டு வந்துள்ளார். ஆனால் மீண்டும் தருமபுரி மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் செய்து கைது செய்யப்பட்டார்
இந்நிலையில் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிய, கர்ப்பிணி பெண்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு அழைத்து, ஆள் நடமாட்டம் இல்லாத மலையடி வர பகுதிகளுக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து இடைத்தரகராக செயல்பட்ட, நடப்பனள்ளி அரசு நடுநிலைப் பள்ளி சத்துணவு சமையலர் லலிதா, முறையான மருத்துவம் படிக்காதவருடன், இணைந்து சட்ட விரோத செயல்களுக்கு இடைத்தரகராக செயல்பட்ட காரணத்தகற்காக, சத்துணவு சமையல் பணியிலிருந்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது போன்ற சட்டவிரோத செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி எச்சரித்துள்ளார்.