இந்தியாவில் ஒரே நாளில் 1,68,912 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று - 904 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,68,912 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,68,912 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இது முந்தைய நாளின் பாதிப்பு எண்ணிக்கையிலிருந்து 11.6% சதவீதம் அதிகமாகும். இந்தியாவில், சனிக்கிழமை 1,52,879 பேருக்கு நோய்த தொற்று கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .
கொரோனா தினசரி உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் கடந்த ஆண்டு அக்டோபர் 10ம் தேதிக்குப் பிறகு நாட்டில் அதிகமான கொரோனா உயிரிழப்புகள் நேற்று பதிவாகியன.
மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், உத்தரப் பிரதேசம், டெல்லி , கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் மொத்த கொரோனா சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 70.82% பேர் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், கேரளா ஆகிய ஐந்து மாநிலங்களை சேர்ந்தவர்கள். நாட்டின் மொத்த ஆக்டிவ் பாதிப்புகளில் 48.57% பேர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குற்பிடத்தக்கது.
இந்த மாநிலங்களைத் தவிர, உத்தரபிரதேசத்தில் கொரோனா அதிகரித்து வருவது கவலைத் தரக்கூடிய விசயமாக அமைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், உத்தரபிரதேசத்தில் மட்டும் புதிதாக 12,748 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியாவில் கொவிட் நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்படும் வரை, ரெம்டெசிவர் ஊசி மற்றும் ரெம்டெசிவர் ஆக்டிவ் மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்தது.
கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, கொவிட்-19 தேசிய மருந்துவ மேலாண்மை நெறிமுறைகளை பின்பற்றும்படி அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த நெறிமுறையில், ரெம்டெசிவர், ஆய்வில் உள்ள மருந்து என பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த மருந்து தொடர்பான முடிவுகளை பகிர்ந்து கொள்வது அவசியம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கோவிட்-19 நிலைமையை ஆய்வு செய்வதற்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார். பிரதமர் தனது உரையில், " 72 மணி நேரத்தில் குறைந்தது 30 தொடர்புகளையாவது பரிசோதிக்க நாம் இலக்கு நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். ஒருவர் பாதிக்கப்பட்டால், அவரது 30 தொடர்புகளை குறைந்தபட்சம் நாம் பரிசோதிக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். ஒரு கட்டிடத்தில் சில தொற்றுகள் இருக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த பகுதியையும் கட்டுப்பாட்டு பகுதியாக ஆக்கிவிட வேண்டாம்.
70 சதவீதம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் என்பது நமது இலக்காக இருக்க வேண்டும். இதை சரியாக செய்யவில்லை என்றால், எதிர்மறை விளைவுகள் வரலாம்" என்று எச்சரித்தார்.