'மீண்டும் ஆட்சிக்கு வருவோம். ஓய்வு பெற்றாலும் விடமாட்டோம்’ - போலீசை மேடையிலையே மிரட்டிய அதிமுக எம்.எல்.ஏ
கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏவான பி.ஆர்.ஜி. அருண்குமார், மேடையிலேயே அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஒருமையில் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்
கோவை ஒசூர் சாலையில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொணடனர். இந்த கூட்டத்தில் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து வருகின்ற 9 ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும், அதிமுக அமைப்பு தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலில் 100 சதவீதம் வெற்றி பெறுதல் உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே காவல் துறையை கண்டித்து அதிமுக அலுவலகம் முன்பாக அதிமுகவினர் திடீரென போராட்டம் நடத்தினர். காவல் துறையினரை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் அதிமுக தொண்டர்கள் நிறுத்தியிருந்த வாகனங்களை, காவல் துறையினர் அப்புறப்படுத்த முயன்றதை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே அங்கு வந்த கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் அதிமுக தொண்டர்களை சமதானப்படுத்தி அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காவல் துறையினர் கடுமையாக சாடி பேசினர். அப்போது பேசிய கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், கோவை வடக்கு மாநகர செயலாளருமான பி.ஆர்.ஜி. அருண்குமார், மேடையிலேயே அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஒருமையில் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். அப்போது பேசிய அவர், “அதிகாரிகள் கொத்தடிமைகள் போல உள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள், காவல் துறையினர் திமிர் பிடித்து அலைகின்றனர். ஆட்டம் அதிகமாக உள்ளது. ஆட்சி திமுகவிற்கும், ஸ்டாலினுக்கு பட்டா கொடுத்தது போல அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர். அதிகாரிகள் ரொம்ப ஓவராக பண்ணுகிறார்கள். உங்களால் என்ன பண்ண முடியும்? அடக்கி வாசியுங்கள். நாங்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள். அதிக பிரசங்கி தனம் பண்னினால் ரொம்ப மோசமாகி விடும். அதிகாரிகளுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் கூட்டத்தை கூட்ட வேண்டும்
கோவையில் உள்ள அரசு அதிகாரிகள் அனைவரும் திமிர் பிடித்து அலைகின்றனர். எங்கள் மீது வழக்கு போடுங்கள். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். எங்கு பணியில் இருந்தாலும், ஓய்வு பெற்றாலும் விட மாட்டோம். ஆம்பளைங்க நாங்க. காவல் துறை அடக்கி வாசிக்கவில்லை என்றால் ரொம்ப மோசமாக போய்விடும். அதிமுகவிற்கு கோவை தான் தலைநகரம் என்று இருக்கும்படி 9ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டம் இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்