வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ அலுவலகத்திற்குள் நுழைந்த மர்மநபர்... சாலையில் சடலமாக மீட்பு - நடந்தது என்ன?
எதிரே வரும் அரசு பேருந்தின் சக்கரத்தில் விழுந்து அந்த நபர் தற்கொலைக்கு முயல்வதும், பின்னர் சாலையில் துடிதுடித்து உயிரிழக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.
பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமாக வானதி சீனிவாசன் இருந்து வருகிறார். கோவை பந்தய சாலை காவல் நிலையம் அருகில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பயன்படுத்தி வருகிறார்.
அத்துமீறி நுழைந்த நபர்:
இந்த அலுவலகத்திற்கு அக்கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை 5:50 மணி அளவில் சட்ட மன்ற அலுவலகத்திற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அறையின் கதவுகளை உட்புறமாக பூட்ட முயன்றார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சட்டமன்ற அலுவலகத்தில் இருந்த அலுவலக உதவியாளர் விஜயன் என்பவர் கதவை சாத்திய அடையாளம் தெரியாத நபரை, சட்டமன்ற அலுவலகத்தில் இருந்து வெளியேற்றினார். பின்னர் இரவு 8.30 மணி அளவில் கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்திற்குள் அடையாளம் தெரியாத நபர் புகுந்தது குறித்து, பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து பந்தய சாலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சட்டமன்ற அலுவலகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சடலமாக மீட்பு:
இதனிடையே அண்ணா சிலை சிக்னல் அருகே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குள் புகுந்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடைக்கும் தகவல் காவல் துறையினருக்கு கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் அந்த நபரின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடிபோதையில் இருந்த அந்த நபர் மீது வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வானதி சீனிவாசன் சட்டமன்ற அலுவலகத்திற்கு நுழைந்த அடையாளம் தெரியாத நபர் யார் என்பது குறித்தும், எதற்காக அலுவலகத்திற்குள் நுழைந்தார்? என்பது குறித்தும், அவர் எப்படி உயிரிழந்தார்? என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
தற்கொலையா?
இந்நிலையில் அவிநாசி சாலையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் பேருந்து சக்கரத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில் எதிரே வரும் அரசு பேருந்தின் சக்கரத்தில் விழுந்து அந்த நபர் தற்கொலைக்கு முயல்வதும், பின்னர் சாலையில் துடிதுடித்து உயிரிழக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)