கணேசமூர்த்தி மீண்டு வருவார் - வைகோ நம்பிக்கை
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் கணேசமூர்த்தியை சந்தித்து, மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கணேசமூர்த்தி மதிமுக பொருளாராக பதவி வகித்து வருகிறார். திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்ட போது, அக்கட்சியில் இருந்து வெளியேறிய 9 மாவட்ட செயலாளர்களில் இவரும் ஒருவர். பின்னர் 1998 நாடாளுமன்ற தேர்தலில் பழநி தொகுதியில் இருந்தும், 2009 மற்றும் 2019 ஆகிய தேர்தல்களில் ஈரோடு தொகுதியில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது, திமுக சார்பில் மதிமுகவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஈரோடு மக்களவை தொகுதியில் மதிமுக சார்பில் கணேசமூர்த்தி, திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் எம்.பி.,யாக பதவி வகித்து வந்தார். தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டு அங்கு துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் கணேசமூர்த்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக கணேசமூர்த்தி கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென நேற்று அவரது வீட்டில் கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வைகோ நலம்விசாரிப்பு
இதனிடையே கட்சியில் ஏற்பட்ட விவகாரங்கள் காரணமாக கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மதிமுகவினர் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் இடையே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் மதிமுக முதன்மை செயலாளரான துரை வைகோ, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணேசமூர்த்தியை பார்த்து திரும்பினார். பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் கணேசமூர்த்தியை சந்தித்து, மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கணேசமூர்த்தி அறிஞர் அண்ணாவை நேரில் பலமுறை சந்தித்தவர். சட்டமன்ற உறுப்பினராகி மக்களின் அன்பையும் பெற்றார். நாடாளுமன்றத்திற்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். இம்முறை கட்சியில் அனைவரும் சேர்ந்து துரை வைகோவை அனுப்ப வேண்டும்.
கணேசமூர்த்திக்கு அடுத்த வாய்ப்பு பார்ப்போம் என்று கூறினார்கள். அதற்கு நான் ஏற்றுக் கொள்ளவில்லை பிறகு ஓட்டெடுப்பு எல்லாம் நடத்தப்பட்டது 99 சதவிகிதம் அவரை நிறுத்த வேண்டும் என்றார்கள். இரண்டு சீட்டுகள் வாங்குங்கள் ஒன்றை கணேசமூர்த்திக்கும் ஒன்றை துரை வைகோவுக்கு கொடுப்போம் என்று கூறினார்கள். அது போன்று செய்யலாம் என்று கூறினேன் அதன் பிறகும் வாய்ப்பில்லாமல் போனால் ஒரு வருடத்தில் சட்டசபை தேர்தல் வருவதால் அவரை எம்எல்ஏவாக நிற்க வைக்கலாம் என்று எண்ணினேன். இல்லையெனில் அதை விட பெரிய பதவியை ஸ்டாலினிடம் கேட்டு அவருக்கு வாங்கி தரலாம் என்று பார்ப்போம் என்று நினைத்தேன். சட்டமன்ற தேர்தல் வரும்பொழுது அவருக்கு உண்டான காயம் ஆறிவிடும். அவர் தென்னை மரத்திற்கு போடுகின்ற நஞ்சினை கலந்து குடித்திருக்கிறார். பிறகு அங்கு வந்த கபிலனிடம் இதைக் கூறி நான் போயிட்டு வருகிறேன் என்று சொன்னாராம் அதனை தொடர்ந்து உடனடியாக ஈரோட்டில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். அங்கு முதலுதவி சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இரத்த அழுத்தம் குறைகிறது. அனைவரும் நம்பிக்கையுடன் இருப்போம் என்றும் மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள். இரண்டு நாள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள் என்றார்.