(Source: ECI/ABP News/ABP Majha)
Selfie With Annamalai: ’செல்பி வித் அண்ணாமலை’ நிகழ்ச்சிக்கு கல்லூரி மாணவிகள் எதிர்ப்பு: திருப்பூர் மாணவிகள், பாஜகவினர் வாக்குவாதம்
’செல்பி வித் அண்ணா’ என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் ’செல்பி’ எடுக்கும் போட்டி நடத்த திருப்பூர் பாஜக வடக்கு மாவட்ட மகளிர் அணி ஏற்பாடு செய்தது.
’செல்பி வித் அண்ணா’ என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் ’செல்பி’ எடுக்கும் போட்டி நடத்த திருப்பூர் பாஜக வடக்கு மாவட்ட மகளிர் அணி ஏற்பாடு செய்தது. திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கல்லூரி மற்றும் எல்.ஆர்.ஜி. பெண்கள் கல்லூரியில் இப்போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் எனவும், பாஜகவில் இணைந்து தேசத்துன் கரங்களை வலுப்படுத்துவோம் எனவும் அந்த விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் செல்பி எடுக்கும் மாணவர்களுக்கு அண்ணாமலையின் கையெழுத்திட்ட உறுப்பினர் அட்டை உடனே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த விளம்பர போஸ்டர் சமூகவலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. கல்லூரியில் கட்சி உறுப்பினர் முகாம் நடத்த எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் வ.கிருஷ்ணன், பாஜகவின் வாட்ஸ் அப் விளம்பர செய்தியுடன் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குநருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் சமூக ஊடகங்கள் (வாட்ஸ் அப்) வாயிலாக சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் பெயரை கல்லூரி நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் தவறாக பயன்படுத்தி வருவதாக அறிகிறோம் எனவும், இந்த நிகழ்விற்கும் கல்லூரிக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. மேலும் கல்லூரி வளாகத்தில் எவ்வித அனுமதியும் கல்லூரி நிர்வாகம் தரவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். இதேபோல எல்.ஆர்.ஜி. பெண்கள் கல்லூரியும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கவில்லை என தெரிவித்தது.
இந்நிலையில் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி கல்லூரிக்கு சென்ற பாஜகவினர் கல்லூரி வளாகத்திற்கு வெளியே பிரச்சாரத்தில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகத்தினர் முன்பக்க கதவை திறக்காமல், பின்பக்க வழியாக தேர்வு முடிந்த மாணவிகளை வெளியே அனுப்பினார். இந்த தகவலை அறிந்த பாஜகவினர் கல்லூரிக்குள் நுழைந்து பேராசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் முன் பக்க கதவுகளை திறக்க வலியுறுத்தினர்.
அதன் பிறகு கல்லூரியை விட்டு வெளியே வந்த மாணவிகளிடம் பாஜகவினர் துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது சில மாணவிகள் தேர்வு உள்ள சமயத்தில் தங்களுக்கு இது போன்ற இடையூறுகளை எதற்காக ஏற்படுத்துகிறீர்கள், தங்களால் வெளியே வர முடியாத நிலை இருப்பதாக கூறி, சில மாணவிகள் பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பாஜகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கல்லூரிக்கு முன்பாக இது போன்ற பிரச்சார நிகழ்ச்சி நடத்த காவல் துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் எனவும், பாஜகவினர் அனுமதி பெறாத காரணத்தை கூறி கலைந்து போக வேண்டும் எனவும் காவல் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து பாஜகவினர் பிரச்சாரத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்