(Source: ECI/ABP News/ABP Majha)
கோடநாடு வழக்கு : சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமனிடம் 3 மணிநேரமாக விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உள்ளிட்டோர் 3 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இரவில் ஆயுதங்களுடன் எஸ்டேட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்துவிட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது.
இதுதொடர்பாக சயன், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல்துறையினர், இவ்வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக கூறிய சயன் உள்ளிட்டோரிடம் விசாரணை செய்தனர். இதையடுத்து ஏடிஎஸ்பி தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீசன், பிஜின் குட்டி உள்ளிட்டோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மற்றும் கனகராஜ் விபத்து வழக்குகளை காவல் துறையினர் மறு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை அழித்ததாக கனகராஜின் சகோதாரர் தனபால் (44) மற்றும் அவரது உறவினர் ரமேஷ் (34) ஆகியோரை கடந்த மாதம் 25 ம் தேதி நீலகிரி மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர். கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் இரண்டாவது முறையாக விசாரணை நடத்தப்பட்டது. இவ்வழக்கில் இதுவரை 81 பேரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
#JUSTIN | கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு: விவேக் ஜெயராமனிடம் விசாரணைhttps://t.co/wupaoCQKa2 | #Kodanadu | #VivekJayaraman | #TNPolice | #Sasikala pic.twitter.com/FeMoZwgbdm
— ABP Nadu (@abpnadu) December 22, 2021
இந்த நிலையில் நீலகிரி தனிப்படை காவல் துறையினர் சசிகலாவின் உறவினரான விவேக் ஜெயராமனிடம், கோவை காவலர் பயிற்சி பள்ளியில் வைத்து விசாரணை நடத்தினர். சசிகலாவின் அண்ணன் மகனும், இளவரசியின் மகனுமான விவேக் ஜெயராமன் ஜெயா தொலைக்காட்சி இயக்குநர்களில் ஒருவராக உள்ளார். கோடநாடு பங்களா மற்றும் எஸ்டேட் குறித்து நன்கு அறிந்தவர் என்ற முறையில் விவேக் ஜெயராமனிடம் விசாரணை நடத்த காவல் துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். இதன்படி இன்று பிற்பகலில் விவேக் ஜெயராமன் விசாரணைக்கு ஆஜரானர். அப்போது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் உள்ளிட்டோர் 3 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு பின்னர் விவேக் ஜெயராமன் காரில் கிளம்பிச் சென்றார். இதையடுத்து சசிலகா தரப்பினரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.