'ஆளுநரை மிரட்டுவதை விட்டுவிட வேண்டும்’ - புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி
"தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநரை குறிவைத்து தாக்கும் போக்கு உள்ளது. ஆளுநரை மிரட்டுவதை விட்டுவிட வேண்டும். ஆளுநரை மிரட்டும் தமிழக அரசாங்கம் இருக்க வாய்ப்பே இல்லை."
கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழக ஆளுநர் நேற்று ஆன்லைன் ரம்மிதடைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். எனவே ஆன்லைன் ரம்மியால் சொத்துக்களை இழந்தார்கள் உயிர்களை இழந்தார்கள் போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது. டாஸ்மாக் மூலம் தான் அனைத்து விதமான சமூக கேடுகள் நடைபெறுகிறது. டாஸ்மாக் கடைகளை அறவே மூட வேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநரை குறிவைத்து தாக்கும் போக்கு உள்ளது. ஆளுநர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர். அரசியல் திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பவர்கள் ஆளுநர்கள். ஆளுநர்கள் இல்லாமல் மாநில அரசை எண்ணிப் பார்க்க முடியாது.
மத்திய அரசுக்கு மாறான சட்டங்களை மாநில அரசு நிறைவேற்றி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதெல்லாம், அரசியல் சாசனத்தை புரியாமல் இருப்பவர்கள் பேசுவது. சட்டமன்றத்திற்குள் முதலமைச்சர் கைகட்டி சும்மா பார்க்க மாட்டோம் என கூறுவது எல்லாம் ஆபத்தானது. 2021 வரை பிரதமர் மோடி வந்த போது கருப்பு பலூன் பறந்தது. ஆனால் தற்போது நிறுத்தி விட்டு சரண் அடைந்துவிட்டனர். குடும்பமே சென்று மோடியை கை தூக்கி நிற்பது இவர்கள் சங்கீகளாக மாறிவிட்டார்களா?. இது குறித்து இஸ்லாமிய, கிறிஸ்துவ சகோதரர்கள் விளக்கம் கொடுக்க வேண்டும். இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் இனி மேலும் திமுக போடும் நாடகத்தை நம்பாதீர்கள். உங்களோடு ரம்ஜான் மாதத்தில் தொப்பி போட்டு வருவார்கள் ஏமாந்து விட வேண்டாம். ஆளுநரை மிரட்டுவதை விட்டுவிட வேண்டும். ஆளுநரை மிரட்டும் தமிழக அரசாங்கம் இருக்க வாய்ப்பே இல்லை.
ரம்மிக்கு மது பழக்கங்களுக்கு காரணமாக இருக்கும் டாஸ்மாக்கை மூட வேண்டும். பெண்களை விதவையாக்குவதை நிறுத்த வேண்டும். டாஸ்மாக்கை மூட ஆளுநர் ஒப்புதல் தேவையில்லை. டாஸ்மார்க் கடைகளை போல பார்களில் சட்ட விரோதமாக மது விற்கப்படுகிறது. அதுவும் கரூர் மூலம் நடைபெறுகிறது. எத்தனை சட்ட விரோத பார்கள் நடைபெறுகிறது என்பதை நிதித்துறை அமைச்சர் ஆய்வு செய்து சொல்ல வேண்டும். மே 15க்குள் சட்டவிரோத பார்களை அமைச்சர் செந்தில் பாலாஜி மூட வேண்டும். இல்லையென்றால் நாங்கள் மூடுவோம் என கூறினார். இரண்டாவது டாஸ்மார்க் பார்களை மூட போராட்டம் நடத்துவோம். மூன்றாவதாக மது தயாரிப்பு ஆலைகளை மூடப் போராட்டம் நடத்துவோம். தனி நபர் கஜானாவிற்கு சட்ட விரோத மது விற்பனையால் வரும் பணம் போகிறது. பல இடங்களில் சட்டவிரோத பார் நடைபெறுகிறது. டாஸ்மார்க் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியுடனும், திமுக கூட்டணி கட்சிகளுடனும் பேச உள்ளேன்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்